Articolo completo
மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த அருண் குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், “ மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக வைகை ஆறு உள்ளது. இந்த வைகை ஆற்றின் துணை நதியான குண்டாறு உள்ளது. இந்த ஆற்று பகுதியில் உள்ள திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றில் சட்ட விரோதமாக குவாரிகள் அமைத்து வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து இரவு பகலாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிப்பது மட்டுமல்லாமல் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட விரோத குவாரியை தடை செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில், “ இந்த விவகாரம் முதலில் விசாரணைக்கு வந்தபோது, கள்ளிக்குடி வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத குவாரி எதுவும் நடைபெறவில்லை, என நீதிமன்றத்திற்கு தவறான அறிக்கை தாக்கல் செய்தார். மணல் கடத்தல் இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்தபோது உத்தரவு பிறப்பித்தோம். மனுதாரரின் வழக்கறிஞர், மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும் புகைப்படங்களை இணைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கள்ளிக்குடி உதவி வட்டாட்சியர் ஷர்மிளாவிடம் இந்தப் புகைப்படங்கள் காட்டப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் மசவனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவை என்று அவர் கூறினார். மசவனத்தம் குக்கிராமமும் கள்ளிக்குடி கிராமத்திற்குள் வருகிறது. எனவே இந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்பது மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரிய வருகிறது. மேலும் மணல் கொள்ளை புகார் கொடுத்தவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு மணல் கொள்ளை விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு இதேபோல் இந்த விவகரத்தில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து ஜூன் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




