இயக்குநர் ராமின் 'பறந்து போ' வெளியாகி இன்றோடு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நிச்சயமாக, காலம் கடந்தும் 'பறந்து போ' கொண்டாடப்படும், பார்க்கப்படும், பேசப்படும்! கொரோனாவுக்குப் பிந்தைய காலங்கள் எத்தனை பரபரப்பு மிகுந்ததாக மாறிவிட்டன, அக்காலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே எத்தனை இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது, அதனால் குழந்தைகள் வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் என்பதை உணர்த்திய இப்படைப்பு பெற்றோர்களுக்கான பாடமாகவும் மாறிப்போனது. 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய படைப்புகளைக் கொடுத்த ராமிடமிருந்து ஓர் அழகான ஹைக்கூ இந்த 'பறந்து போ'. Parandhu Po | பறந்து போ திரைக்கதைக்கெனப் பின்பற்றப்பட்டு வரும் இலக்கணங்களைத் தவிர்த்து, இயக்குநர் ராம் இப்படத்தை ஒரு ரோடு திரைப்படமாகக் கொண்டுசென்ற விதம் தமிழ் சினிமாவுக்குப் புது சுவாரஸ்ய திரைமொழியையும் அறிமுகப்படுத்தியது. குழந்தைகளைப் புரிந்துகொள்ள எவ்வித பரபரப்பும் இன்றி தந்தையின் அணைப்போடு செல்லும் ஒரு பைக் பயணமே போதும் என்பதை கோகுல் - அன்பு - க்ளோரி ஆகிய கதாபாத்திரங்களின் வழியே சொன்ன இந்த சினிமா, பெற்றோர்களின் முகத்தில் மென்முறுவலை உருவாக்கி, பெற்றோரியம் பற்றி பல விஷயங்களையும் புரியச் செய்தது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவையான பணத்தையோ, காஸ்ட்லியான ஆன்லைன் வகுப்புகளையோ கொடுக்க நினைக்கிறார்களே தவிர, அவர்களுடன் செலவிட நேரத்தை ஒதுக்குவதில்லை என்ற சமகாலப் பிரச்னையையும் ஆழமாகப் பேசிய இடத்தில் முன்னின்றது இப்படைப்பு. குழந்தைகளின் உலகம் இத்தனை இயல்பானது, அவர்களின் எதிர்பார்ப்பு, அவர்களின் எண்ணவோட்டம் எப்படியானது என்பதை பெற்றோர்கள் உணர்வதற்கும் இப்படைப்பு வழி அமைத்துக் கொடுத்தது. இயக்குநர் ராம் மேலும், இந்த புதிய திரைமொழியை எங்கும் தொய்வடையாமல், வெற்றிகரமாகக் கரை சேர்த்ததில் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பங்கு மிக முக்கியமானது. இப்படத்தின் கதையோட்டத்துடன் ஒன்றி நகரும் மதன் கார்கியின் வரிகளை மென்மையான மெட்டுகளாக அலங்கரித்தார் சந்தோஷ் தயாநிதி. இந்த ரோடு திரைப்படம், நெரிசல் இல்லாமல் சீரான பாதையில் நகர்வதற்கும், இந்த ஜிங்கிள் வடிவிலான பாடல்கள், கதையைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றன. குழந்தைகளுக்கெனப் பிரத்யேகமாக எடுக்கப்படும் படைப்புகள் தியேட்டர் சந்தைக்குச் சரிப்பட்டு வராது என்றிருந்த நம்பிக்கையை உடைத்ததும் இப்படைப்பு நிகழ்த்திய ஆரோக்கியமான முன்னேற்றங்களில் முக்கிய ஒன்று! சொல்ல வேண்டிய விஷயங்களை, சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால், மார்க்கெட் கிடையாது என ஒதுக்கி வைக்கப்பட்ட படைப்புகளும் ஜனரஞ்சகமாக மாறும் என்பதையும் எடுத்துச் சொன்னது இயக்குநர் ராமின் இந்த 'பறந்து போ'. திரைப்பட வெளியீட்டிற்கு முன்பிருந்தே தன் சிறகுகளை விரித்து, தனக்கான இடத்தையும், அங்கீகாரத்தையும் 'பறந்து போ' அள்ளிக்கொண்டது. ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், அங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற ஹாபிடேட் திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா எனப் பல அரங்குகளிலும் மேடையேறியது. முக்கியமாக, சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றது. அதோடு, 2025-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளில், சிறந்த இயக்குநருக்கான விருதையும் இயக்குநர் ராம் பெற்றிருக்கிறார். இப்படியான அங்கீகாரங்களோடு, திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியான இந்த 'பறந்து போ', ஒவ்வொரு இல்லங்களில் இருக்கும் பெற்றோர்களுக்கும் அத்தனை நெருக்கமானது. Parandhu Po | பறந்து போ எப்போதுமே இயக்குநர் ராமின் படைப்புகள், சமகால இயக்குநர்களுக்கும், அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கும் ஒரு மாஸ்டர் கிளாஸ்தான். 'பறந்து போ' படத்தின் வணிக ரீதியான வெற்றி, குழந்தைகளுக்கான சினிமாவுக்கு மார்க்கெட் இல்லை என ஒதுங்கி வைக்கப்பட்ட பல இயக்குநர்களின் கதைகளுக்கும் சிறகு முளைத்து, தனக்கான இடத்தைத் தேடிக்கொள்ளவும் கூண்டைத் திறந்து வைத்திருக்கிறது. பறவைகளுக்கு முடிவு எல்லை கிடையாது என்பதைப் போல, இந்த 'பறந்து போ' எல்லைகள் தாண்டி, காலம் கடந்தும் பேசப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/director-ram-paranthu-po-movie-one-year-completion-special-article




