புதுடெல்லி, 'எல் நினோ' வானிலை, வரவிருக்கும் பருவ மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சவாலாக அமையக்கூடும் என்றும், உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் வேளாண்துறை செயலாளர் ஆதிஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 2 நாள் மாநாடு வட மாநிலத்தில் ராபி பருவம் என அழைக்கப்படும் சம்பா பருவத்துக்கான ஆயத்தப்பணிகள் குறித்த 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் மத்திய வேளாண்துறை செயலாளர் ஆதிஷ் சந்திரா பருவகால பயிர் சாகுபடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- கடந்த காரிப் (குறுவை) பருவம், மழையை நம்பி சாகுபடி செய்யும் பகுதிகளில், மிகவும் சவாலானதாக இருந்தது. பல மாநிலங்கள் முதலில் பயிர் பரவலை அடைவதற்கும், பின்னர் பயிர்கள் தப்பிப் பிழைப்பதை உறுதி செய்வதற்கும் போராடின. கோதுமை மற்றும் கடுகு போன்ற சம்பா பயிர்களின் விதைப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. வரவிருக்கும் இந்த பருவத்தில், உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நாங்கள் காண்கிறோம். பெரும் சவால் குறுவையை போல சம்பா பருவமும் மழையை நம்பி சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு சவாலாக இருக்கும். சில மாநிலங்கள் அதிகப்படியான மண் ஈரப்பதம் என்ற சிக்கலை எதிர்கொள்ளக்கூடும். அதே நேரத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகள் நீண்ட காலத்துக்கு அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். எல் நினோ வானிலை, வரவிருக்கும் பருவ மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக அமையலாம். இதனால் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ப உத்திகள் வகுக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது ஒரு யதார்த்தம். பல இடங்களில் பாசனப் பகுதிகளிலும் கூட பருவம் தவறி கனமழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நிகழ்கின்றன. இறக்குமதி தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருந்தாலும், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பழங்கள் போன்ற சில தோட்டக்கலைப் பொருட்களைத் தொடர்ந்து இறக்குமதியே செய்கிறது. இதிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். விவசாயிகள் நீடித்த வேளாண்மையுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் விளைவுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். விவசாய இழப்புகளை குறைக்க உட்கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டியது அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு கொள்முதல் முறை எதுவும் இல்லை. ஆனாலும் சந்தை சார்ந்த தேவையின் காரணமாக உற்பத்தியும், சந்தைகளும் விரிவடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/el-nino-food-grain-production-may-be-affected-agriculture-department-warning-to-farmers




