சென்னை, காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் புகைப்படத்தை பதிவிட்டு, பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “ரூ.22,006 கோடி கடன் பாக்கிக்கு வெறும் ரூ.6.5 கோடி தட்சிணை. “ஒரே போடு. 99.97% அபேஸ்!" "நண்பேண்டா." என்று கட்டிப்பிடித்து கார்ப்பரேட் சகாக்களுக்கு கதகதப்பூட்டும் மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளுக்கும் மக்களின் சேமிப்புப் பணத்திற்கும் கூசாமல் அடித்திருக்கிறது ஒரு 'பட்டை நாமம்'! இவ்வளவு பெரிய சலுகை இன்று இவருக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதன் பின்னணியை அறிய, சுபாஷ் சந்திரா எழுதிய 'The Z Factor' சுயசரிதை புத்தகத்தில் அவரே ஒப்புக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிணைப்பைப் பார்த்தாலே போதும்: 1. “எனக்கு 10 வயது இருந்தபோது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினர் ஒருவரை நான் சந்தித்தேன். என் தந்தை ஒரு ஸ்வயம்சேவகராக இருந்தவர் என்பது எனக்குத் தெரியும். நான் பிறந்த இடமான ஆதம்பூரில் அவர் ஒரு 'சாகா'வை (கிளை அமைப்பை) நடத்தி வந்தார். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நான் அதில் தவறாமல் கலந்துகொண்டேன்.” 2. அதுமட்டுமல்ல, அதே புத்தகத்தில் வாஜ்பாய் காலம் தொடங்கி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வரை தான் நடத்திய லாபியிங் விவகாரங்களையும் விவரித்திருப்பார்: “தேசியவாதக் கொள்கைக்காக அறியப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாங்கள் அணுகினோம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரஜ்ஜு பய்யாவை நான் சந்தித்தேன். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.-ன் ஜண்டேவாலன் அலுவலகத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில், அந்தப் பிரச்சினையை நான் அவருக்கு விளக்கினேன்.” 3. அரசாங்கத்தையும் சட்டத்தையும் எப்படி வளைக்கலாம் என்று அவர் எழுதியிருக்கும் வரிகள்: “முடியாது அல்லது இல்லை என்ற பதிலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. உங்கள் லட்சியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்து, உங்கள் நோக்கங்களும் நேர்மையாக இருந்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே என் எண்ணம். அதிகபட்சமாக சில நபர்களோ அல்லது அமைப்போ உங்கள் முன்னேற்றத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதில் மட்டுமே வெற்றி பெறக்கூடும்; அவ்வளவுதான்.” அவர் சொன்னது உண்மைதான்! பா.ஜ.க. ஆட்சியில் பிரதமரின் 'நண்பர்களுக்கு' சிஸ்டம் ஒருபோதும் தடையாக இருக்காது; வெறும் 6.5 கோடியை விட்டெறிந்து 22,006 கோடியை ஆட்டையப் போட அது வழியமைத்துக் கொடுக்கும்! 4. அவரது தாத்தா சொன்ன கடன் தீர்க்கும் தாரக மந்திரம்: “அசல் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு வட்டித் தொகையை விட்டுவிடுங்கள். தாமதமாக முழுத் தொகையையும் பெறுவதை விட, உடனடியாக ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவதே சிறந்தது.” தாத்தா அசலையாவது கொடு என்றார்; ஆனால் அசலையும் கொடுக்காமல், அசால்ட்டாக ஏமாற்றிய நீங்க அசல் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்! சில ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனுக்கோ, ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கோ ஜப்தி நோட்டீஸ் ஒட்டி மிரட்டும் இந்த பா.ஜ.க. அரசு, தன் 'சங் பரிவார்' சகாவுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது! எளிய மக்களின் சேமிப்பையும் பொதுத்துறை வங்கிகளையும் பணையம் வைத்து, கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டுக்கொள்ளைக்கு மக்கள் மன்றத்தில் தக்க பாடம் புகட்டப்படும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-showers-concessions-on-corporate-allies-manickam-tagores-criticism




