சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன. அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா? எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/separate-commission-needed-to-find-causes-of-custodial-deaths-ttv-dhinakaran




