Articolo completo
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் "தெய்வம் மனித உருவில் வரும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நான் உணர்ந்தது, என் இரண்டு குழந்தைகளின் பிறப்பின் போதுதான். தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு, என் வாழ்க்கையில் நான் என்றென்றும் நன்றியுடன் நினைக்கும் மருத்துவர் — கோவில்பட்டி கே.ஜி. கிளினிக்கின் டாக்டர்.சுப்புலட்சுமி மேடம், MBBS, DGO. என் முதல் குழந்தை பிறக்கும்போதும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு என் இரண்டாவது குழந்தை பிறக்கும்போதும், நான் நம்பிச் சென்ற மருத்துவர் ஒருவர்தான் – டாக்டர் சுப்புலட்சுமி மேடம். என் இரண்டு குழந்தைகளின் பிறப்பிலும் ஒரே மருத்துவரை நம்பியதே அவர் மீதான என் நம்பிக்கையைச் சொல்கிறது. இரண்டு பிரசவ காலங்களிலும் எனக்கு மிகவும் கடுமையான வலி ஏற்பட்டது. அந்த வலியைத் தாங்க முடியாமல், "அம்மா... தயவுசெய்து சிசேரியன் செய்து விடுங்கள்" என்று கண்ணீருடன் கேட்டேன். ஆனால் அவர் என் கையைப் பிடித்து மிகவும் அமைதியாக, "உன்னுடைய உடல்நிலைக்கு இயல்பான சுகப் பிரசவம் செய்ய முடியும். கொஞ்சம் தைரியமாக இரு. இந்த வலி சில நேரம்தான். உன்னால் முடியும். நான் உன்னுடன் இருக்கிறேன்," என்று சொன்னார். மேலும், அவர் என்னிடம் சொன்ன ஒரு அறிவுரை இன்னும் என் மனதில் ஒலிக்கிறது. "இன்று வலிக்குப் பயந்து தேவையில்லாமல் அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்யாதே. உன் உடல்நிலைக்கு இயல்பான பிரசவம் சாத்தியமாக இருக்கிறது. அதைத் தாண்டி வந்தால், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருப்பாய்," என்றார். அந்த சில வார்த்தைகள் எனக்கு மருந்தை விடப் பெரிய சக்தியைக் கொடுத்தன. என் பயம் மெதுவாக நம்பிக்கையாக மாறியது. ஆனாலும் என் முதல் குழந்தையின் பிரசவம் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயந்துதான் போனோம். ஆனால் டாக்டர் சுப்புலட்சுமி மேடம் மட்டும் தன்னுடைய அமைதியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. 'எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்ற அவரது வார்த்தைகளும், பொறுமையான அணுகுமுறையும், இறுதியில் என் குழந்தையை சுகப்பிரசவத்தின் மூலம் இந்த உலகிற்கு வரவழைத்து.அந்த நொடி என் கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டன. மருத்துவர் மேலும் ஆறு வருடங்கள் கழித்து என் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்ட பிரசவ சிக்கலையும் தீர்த்து வைத்து, மீண்டும் அனைவருக்கும், எனக்கும் நம்பிக்கையும் தைரியமும் கொடுத்து, என் இரண்டாவது குழந்தைக்கும் சுகப்பிரசவம் ஏற்படுத்தி பூமிக்கு வரவழைத்து விட்டார்கள். இன்றும் அந்த இரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கும்போது, இறைவனின் அருளாலும், டாக்டர் சுப்புலட்சுமி மேடம் கொடுத்த சரியான வழிகாட்டுதலாலும், அவர் சொன்னது போலவே நான் இன்று வரை எனக்கு எந்தவொரு நீண்டகால முதுகுவலி பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். அந்த உண்மையை நினைக்கும் ஒவ்வொரு முறையும்,அவர் மீது என் நன்றி இன்னும் அதிகமாகிறது. இன்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அவர் இன்னும் அதே கிளினிக்கில், அதே புன்னகையுடன், அதே அன்போடும், அதே நம்பிக்கை தரும் வார்த்தைகளோடும் நோயாளிகளை வரவேற்கிறார். அவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும், "நன்றி மேடம்" என்று சொல்லாமல் என்னால் வர முடியாது. ஒரு மருத்துவரின் உண்மையான வெற்றி அவர் எழுதும் மருந்துச் சீட்டில் இல்லை; நோயாளியின் மனதில் விதைக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்று இந்தக் கட்டுரை மூலமாக டாக்டர் சுப்புலட்சுமி மேடத்திற்கு என் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நாள் பிரசவ அறையில் அவர் எனக்குக் கொடுத்த தைரியத்தை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். என் இரண்டு குழந்தைகளின் பிறப்பிலும், என் தாய்மையின் பயணத்திலும், என் வாழ்க்கையின் அழகான நினைவுகளிலும் டாக்டர் சுப்புலட்சுமி மேடம் என்றென்றும் இடம் பெற்றிருப்பார். ஒரு சுவாரஸ்யமான உண்மை — நானும் என் அம்மாவின் கருவிலிருந்து வெளிவந்த நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து என்னையும் பார்த்தவர் இதே டாக்டர் சுப்புலட்சுமி மேடம்தான். இன்று என் குழந்தைகளுக்கும் அவரே மருத்துவர். ஒரே மருத்துவர், எங்கள் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகளுக்கும் அன்போடு உடன் இருக்கிறார் என்பது, என்னைப் பொறுத்தவரை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.நான் இன்றும் எனக்கு உடம்பில் ஏதாவது பிரச்சினை என்றாலும், இவர்களிடம் காண்பித்து விட்டு சென்றால், எனக்கு உடனே உடல் சரியாகி விடும் என்பது திண்ணம். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல... ஒரு தாயின் அன்புடன் மற்றொரு தாய்க்கு தைரியம் கொடுத்த தெய்வம். என்றென்றும் அன்புடன், இந்திரா ப்ரியதர்ஷினி... வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




