உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட புதிய தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்குவார்கள். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும். ரத யாத்திரையைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே, பூரி ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக புறப்படும் பக்தர்கள், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுவது நல்லது. பக்தர்கள் பயணத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை பார்ப்போம். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒடிசா அரசாங்கம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரிக்கு வருகை தரும் பக்தர்கள், அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கோவில் நுழைவு விதிமுறை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜெகநாதர் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. இருப்பினும், அனைவரும் ரத யாத்திரையை கண்டுகளிக்கலாம், பிரமாண்ட ரத யாத்திரையின்போது ரதங்களை இழுப்பதிலும் பங்கேற்க முடியும். வெயிலுக்கு ஏற்ற உடை பூரி நகரில் இந்த மாதத்தில் பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, ரத யாத்திரையின்போது நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் வசதிக்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. மேலும், வெயில் அதிகமாகும்போது நீரிழப்பு ஏற்படும் என்பதால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். எனவே, கையில் குடிநீர் வைத்திருப்பது அவசியம். தடை செய்யப்பட்ட பொருட்கள் கோவிலை சுற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், பெல்ட்கள், பர்சுகள் மற்றும் பைகள் போன்ற தோல் பொருட்களையும், செல்போன்கள், கேமராக்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். போக்குவரத்து மாற்றம் பாதுகாப்பு கருதி, ரத யாத்திரையின்போது ரதங்கள் செல்லக்கூடிய பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். எனவே, பக்தர்கள் தங்கள் வாகனங்களை, ஆங்காங்கே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப, நகரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். பூரி ஜெகநாதர் உணவு பூரி கோவிலின் புகழ்பெற்ற 'மகா பிரசாதம்' பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மகாபிரசாதத்தைத் தவிர, டால்மா (Dalma), பாரா குக்னி (Bara Ghugni), சென்ன போடா (Chhena Poda) மற்றும் காஜா (Khaja) உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய ஒடியா உணவுகளும், உள்ளூர் டிபன்களும் பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தெருவோர உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் உணவருந்தலாம். தங்கும் வசதிகள் ரத யாத்திரையை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால், பெரும்பாலும் பூரியில் உள்ள ஓட்டல் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டுவிடும். எனவே, பூரி செல்வதாக இருந்தால் தங்குமிடத்தை முடிந்தவரை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது. கோவிலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் அறைகள் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. தர்மசாலைகளும் உள்ளன. சற்று வசதியான தங்குமிடத்தை விரும்பும் பக்தர்கள், கடற்கரையோரம் உள்ள ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்யலாம். போக்குவரத்து வசதி பூரி ரெயில் நிலையத்திற்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரத யாத்திரைக்கு செல்பவர்கள் ரெயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். சாலை வழியாக செல்ல நினைப்பவர்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற இணைப்பு நெடுஞ்சாலைகள் மூலம் பூரியை அடையலாம். பூரிக்கு விமானத்தில் செல்பவர்கள், பூரியில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் புவனேஷ்வரில் அமைந்துள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் சென்று, அங்கிருந்து ப்ரீ-பெய்ட் டாக்ஸி மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ பூரியை அடையலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/are-you-visiting-puri-for-rath-yatra-key-information-you-need-to-know




