சென்னை, காவிரிப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில், த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது Fair Delimitation தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை. நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே தி.மு.க.வும் எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்பதை நாடறியும். எங்களுக்குத் தயக்கம் இல்லை சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்டமுன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர்தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை. ‘டேக் டைவர்ஷன்’ வேண்டாம் ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்கிறது. புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது! தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது; பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-party-has-the-standing-to-offer-advice-to-the-dmk-duraimurugan-lashes-out




