சிரிப்பு, கவலை சிரிப்பு, கவலையை போக்கும் சிறந்த மருந்துகளில் ஒன்று என்று பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். சிரிப்பின் மகிமையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். முழு மனதுடன் சிரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுவது போல, அழுவதும் உடலுக்கு நல்லது. அழுவது உடலுக்கு நல்லதா? என்று நீங்கள் மனதில் யோசிப்பது நன்கு கேட்கிறது. சிரிப்பதால் மட்டும் அல்ல, அழுவதாலும் நமக்கு பல நன்மைகள் உடலுக்கு கிடைப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிரிப்பு எந்த அளவிற்கு நம் மனதுக்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கிறதோ, அதற்கு சமமான அளவிற்கு அழுகையும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உணர்வுகளில் சிரிப்பு ஒரு முனை என்றால், அழுகை மறுமுனையாகும். மனிதர்கள் ஏன் அழ மறுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பலரது பதிலாக இருப்பது அழுகை பலவீனத்தின் அடையாளம் என்பதே. உலகில் கண்ணீரை பலவீனத்துகுரியதாகவும், வெட்கத்துக்குரியதாகவும் மற்றும் குழந்தைத்தனதுக்கும் அடையாளப்படுத்துகின்றனர். அழுகை, பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் அது நன்மையை அளிக்கக் கூடியது. அழுகை பலவீனத்தின் அடையாளம் அல்ல: பல சினிமாக்களில் `ஆண்மகன் அழக்கூடாது’ என்றும் `நான் அழவில்லை கண்ணு வேர்க்குது’ என்று சொல்வதை கேட்டுருப்போம். சிலர் எந்த அளவுக்கு பிரச்சினைகளும், கஷ்டங்களும் அவர்கள் வாழ்வில் வந்தாலும் அழ மாட்டார்கள். அப்படி அழக் கூடிய தருணங்கள் வரும்போது, நாம் அழுகையை கட்டுப்படுத்தினால் அதனால் வரும் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். மனம் தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வரும் சமயங்களில் நாம் அழுதால் அந்த பிரச்சினையினால் உண்டாகும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடமுடியும். மன அழுத்தம் அதிகமாக உள்ளபோது, மனம் விட்டு அழுவோமானால், மனம் மிகவும் அமைதியாகி நமக்கு தூக்கம் வருவதை உணரலாம். பின்னர் தூங்கி எழுந்தவுடன், நம் மனசோர்வு அனைத்தும் நீங்கியிருப்பதைக் உணரலாம். அழுவது நிலைமையை மாற்றாது என்றாலும், அது உடனடியாக நிவாரணத்தையும், தற்காலிக ஆறுதலையும் தருகிறது. அழுகையை ஒருபோதும் அடக்கக்கூடாது என்று சொல்வதை சில சமயம் கேட்டிருப்போம். அப்படி அடக்கும்போது, காலப்போக்கில் நோய் எதிப்பு மண்டலம் பலவீனப்படலாம். மேலும் அழுகை உணர்வைக் கட்டுப்படுத்துவதால், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். மக்கள் தங்கள் அழுகையை மறைக்க முயற்சித்தால், அவர்கள் மனஅழுத்ததால் அவதிப்படுவதாக சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டது. நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 2008-ம் ஆண்டு 30 நாடுகளை சேர்ந்த 4,300 இளைஞர்களிடம் நடத்தபட்ட ஆய்வில் அழுகைக்கு பிறகு அவர்களின் மன மற்றும் உடல்நலம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வில், அழுகை 88.8% மக்களின் மனநிலையை மேம்படுத்தியது. அழுகை-ஆரோக்கியமான செயல்பாடு: அழுகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர், மனம்விட்டு உடனேயே அழுவாரானால், அவரின் இரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் சுரப்பியே, கண்ணிலிருந்து கண்ணீரை உருவாக்குகிறது. அழுகை கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. கண்ணீரில் லைசோசைம் என்ற திரவம் உள்ளது, இது பாக்டீரியாவைக் கொல்லும் சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உதவும். வியர்வை, சிறு நீர் உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும். சரி அழுவது நல்லது தான் என்றாலும், மிதமிஞ்சி அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர். இனி உங்களுக்கு தாங்கமுடியாத பிரச்சினை காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைகுட்டையை வைத்துக்கொள்ளுங்கள்! அழுதுவிடுங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/laughter-is-not-the-only-medicine-crying-is-also-a-wonderful-medicine




