தர்மபுரி, நீர்வரத்து குறைந்தது கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும். அப்போது இங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வர். மேலும் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு ரசிப்பர். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங் காததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இதனால் நீர்வரத்து முற்றிலுமாக சரிந்துள்ளது. பாறைகளாக காட்சி அளிக்கிறது குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் நீர் நிரம்பி இருந்த நிலை மறைந்து தற்போது வெறும் பாறைகளாக மட்டுமே காட்சியளிக்கிறது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் தற்போது நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் எடுக்க தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலாவை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-river-in-hogenakkal-appears-as-rocks-danger-of-water-shortage




