சென்னை, வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. போதிய மழை இல்லாததால் கடந்த மாதம் வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரிந்தது. இதனால் வைகை அணையை நம்பியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் உயர்வு இதன்மூலம் வைகை அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயரத்தொடங்கியது. முழுமையாக மழை பெய்யாத நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் தயவால் வைகை அணை, தனது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரின் மூலம் 2 மாதங்களுக்கு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, "வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. வரும் நாட்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-to-34-feet-danger-of-water-shortage-eliminated




