சென்னை, அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து, மேகத்தாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மேகதாது அணைத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும் என கர்நாடக முதல்-மந் திரி டி.கே.சிவக்குமார், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை டெல்லியில் 28.09.2026 அன்று சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இத்திட்டம் தொடர்பாக மத்திய நீர் ஆணையம் ஏற்கனவே மேகேதாட்டு பகுதியில் கள ஆய்வு நடத்தியுள்ளது எனவும், இந்த அணைத்திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும் வனப்பகுதிக்கு ஈடாக மாற்று நிலமும் அடையாளம் காணப்பட்டு, அது குறித்த விவரங்கள் மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் டி.கே.சிவக்குமார் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு அவசரமும் தீவிரமும் காட்டும் இவ்வேளையில், தமிழ்நாடு அரசு அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசு ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படக்கூடிய சூழலில், தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில், போர்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட வேண்டும். உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் கூட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கூட்டி, ஒத்தக் கருத்தை உருவாக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதி மேகதாது அணை கட்டப்பட்டால், அது தமிழ்நாட்டின் உரிமைகளையும் மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவையும் பாதிக்கும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்கிவிடும். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும். விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், விவசாயத்தை நம்பியுள்ள மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அத்துடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்பதுடன், காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு அடிப்படையில் ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அமைந்துவிடும் என்பதையும், பிரதமரிடம் தமிழ்நாடு தரப்பில் விளக்கிக் கூறவேண்டும். மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதல்-அமைச்சரும் எடுத்திட வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாவது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/union-government-should-not-grant-approval-for-the-mekedatu-dam-project-cpi-urges




