திஸ்பூர், தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகிய பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வந்தார். 21-வது நாளாக அவர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை இன்று காலையில் போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில், பொது இடத்தில் சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை வரைந்ததற்காக 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கவுகாத்தில் உள்ள பாசிஸ்தா பாலம் மற்றும் ஜோதி-பிஷ்ணு சர்வதேச கலையரங்கம் ஆகிய இடங்களுக்கு அருகில் சோனம் வாங்சுக்கின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடத்தில் அனுமதியின்றி உருவப்படத்தை வரைந்ததாக கூறி நகுல் மிலி மற்றும் கவுரவ் சிங் ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போல் கவுகாத்தியில் மற்றொரு இடத்தில் சோனம் வாங்சுக்கின் உருவப்படம் வரையப்பட்டுள்ளதாகவும், அதை வரைந்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/assam-two-arrested-for-painting-a-portrait-of-sonam-wangchuk-in-a-public-place




