சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ந் தேதி அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும். அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த 25 ஆண்டுகளாகவே புதிய தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில்தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத்தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பதுதான் எனது கருத்து. முதல்-அமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும். ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம்தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியாதான் வழிகாட்டியாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த டெல்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுடெல்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில்தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்ம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928 கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது. 2001-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும் சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும். அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும் கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-separate-administrative-city-should-be-established-outside-chennai-anbumani-ramadoss




