சென்னை, மதிமாற புகழேந்தி இயக்கத்தில் சூரி ஆர்.எஸ். இன்போ டெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள புதிய படம், 'மண்டாடி'. இதில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சுகாஷ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை வெளியாகும் மண்டாடி உலகம் முழுவதும் நாளை திரைக்கு வரவுள்ள மண்டாடி படம் குறித்துபடக்குழுவினர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுதான் படகு போட்டி. மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளமாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெறுகிறது. 150-லிருந்து 200 படகுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், 20 கடல் மைல் தொலைவில் பாய்மரப் படகுகளில் ரேஸ்கள் நடக்கும். நடுக்கடலில் 20 மைல்களுக்கு அப்பால் கொடியோட சில எல்லைப் படகுகளை நிறுத்தி வைத்திருப்பார்கள். நம்ம படகு அந்த எல்லைப் படகைப் போய் சுத்திவிட்டு, திரும்பவும் கரைக்கு வருவதை பார்த்து ஊரே கூடி நின்று கொண்டாடும். 3 மணி நேரத்துக்கும் மேல் நடக்கும் இந்தப் போட்டி சாதாரணமானது கிடையாது. திரும்பி வரும்போது நாம் உயிருடன் வரவேண்டும். ஏனெனில் பல படகுகள் கடலில் மூழ்கி விடும். இல்லையெனில் பலருக்கு காயம் ஏற்பட்டு விடும். சுருக்கமாக சொன்னால் இது மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் போட்டி என்று கூட சொல்லலாம். அணியின் கேப்டன் தான் 'மண்டாடி' இந்த ரேஸ்சில் மனிதனோட சூழ்ச்சியையும் வெல்லணும். அதே சமயத்தில் கடலில் அடிக்கும் காற்றையும் வெல்ல வேண்டும் இப்படி சவால்கள் நிறைந்தது தான் இந்த போட்டி. ஒரு அணியில் ஆறு பேர் இடம் பெறுவார்கள். இந்த அணியின் கேப்டன் தான் 'மண்டாடி' என்று அழைக்கப்படுபவர். கேப்டன்தான் கடலின் நீர் வாடையைச் சரியாக கணிக்க முடியும். அடிக்கும் காற்றில் படகை எந்த திசையில் செலுத்த வேண்டும்? என்ற எல்லா விவரங்களும் தெரிந்தவர்தான் படகின் கேப்டன். படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள், அவர்களின் வாழ்க்கை, போராட்டம், ஈடு இணையில்லா அன்பு, போட்டி என்று எல்லாவற்றையும் சொல்லும் படமாக 'மண்டாடி' உருவாகி வருகிறது. புதிய பரிமாணத்தில் சூரி இந்த படத்தின் பலம் என்று சூரியின் நடிப்பை சொல்லலாம். அந்த அளவு சூரி இந்தபடத்துக்காக மெனக்கெட்டு உழைத்துள்ளார். பல இடங்களில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். கதாநாயகனாக கலக்கி வரும் சூரியின் நடிப்பை இந்த படத்தில் இன்னொரு புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். இது சூரியின் சினிமா பயணத்தில் மைல்கல் படம் என்று கூட சொல்லலாம். அதேபோல இந்த படத்தில் மகிமா நம்பியார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், கலகலப்பு என்று நடித்து வந்த அவர், இந்த படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அதேபோல சூரிக்கு இணையாக சுகாஸ் நடித்துள்ளார். சூரியைப் போலவே அவரும் கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு புதிய அடையாளத்தை தரும். அதேபோல சத்யராஜின் அனுபவ நடிப்பும் இந்த படத்தில் பேசப்படும். ரசிகர்களை இந்த படம் திருப்தி செய்யும் இப்படி ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக படம் எதிர்பார்ப்பை தாண்டிலும் சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. உலகம் முழுவதும் நாளை 'மண்டாடி' படம் திரைக்கு வருகிறது. தரமான திரைப்படங்களுக்கு ரசிகர்களின் அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் இந்த தரமான படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த படம் திருப்தி செய்யும் என்று அடித்துக் கூறுகிறோம்", என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mandadi-featuring-a-different-facet-of-sooris-acting




