காதல் என்றாலே எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வு இருப்பதில்லை. ஒருவருக்கு காதல் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவாக இருக்கலாம்; இன்னொருவருக்கு அது வாழ்க்கையில் தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கலாம். இப்படி காதலைப் பற்றிய வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட இருவர் எதிர்பாராதவிதமாக சந்தித்து, அவர்களுக்குள் உருவாகும் உறவை காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்ல முயற்சிக்கும் படம் தான் ‘ஹாய்’. காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கை கூடாததால், அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். இதனால் கடிதம் மூலம் குடும்பத்தாரை மிரட்டிவிட்டு வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி விடுகிறார். அம்மா முகத்தை பார்க்காத, அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நயன்தாரா, திருமண பந்தத்தில் சிக்கி விடாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் அவரும் ஊரைவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார். வீட்டை விட்டு ஓடி வந்த நயன்தாராவும், கவினும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். கவின், தான் எதிர்பார்க்கும் காதலி நயன்தாரா தான் என்று நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார். ஆனால், நயன்தாரா காதலில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். இதற்கிடையே, கவினும், நயன்தாராவும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நயன்தாரா மனதில் இடம்பெற துடிக்கிறார் கவின். அது நடந்ததா, இல்லையா? என்பதே மீதி கதை. கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக கலக்கியுள்ளார், கவின். அவரது எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. காமெடி கலந்த நடிப்பின் மூலம் அவ்வபோது சிரிக்க வைக்கவும் செய்கிறார். அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார் நயன்தாரா. கிராமத்து பெண் என்றாலும், மாடர்ன் உடை மூலம் அந்த அடையாளமே தெரியாத வகையில் பயணிக்கிறார். எமோஷனல் காட்சிகளும் செட் ஆகிறது. கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, அப்பாவாக நடித்திருக்கும் பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுகாசினி மணிரத்னம் என அனைவருமே சிறப்பு. சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் சிரிக்க வைக்கிறது. வி.டி.வி.கணேஷ், பெப்சி விஜயன், காவியா அறிவுமணி, கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் இருப்பும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் கொண்டாட்டம். நேர்த்தியான திரைக்கதை படத்துக்கு பலம். யூகிக்க முடிந்த காட்சிகள் பலவீனம். இலகுவான கதை என்றாலும், அதில் இதமான உணர்வுகள் துள்ளும் காட்சிகளை அடுக்கி ரசிகர்களை ஈர்த்துள்ளார், இயக்குனர் விஷ்ணு எடவன். கிளைமேக்ஸ் பீல்குட் உணர்வு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/movie-review/hi-film-cinema-review




