சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது. ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை ஜோசப் விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும். தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-executives-turning-into-hired-gang-leaders-nainar-nagendran-criticism




