இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இளைஞர் ஒருவர் தயாரித்த ஓட்டுநர் இல்லா (டிரைவர்லெஸ்) கார், சோதனை ஓட்டத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வேன் மீது மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநர் இல்லா கார் பாகிஸ்தானின் அபோதாபாத்தைச் சேர்ந்தவர் எஹ்சான் ஜாபர் (வயது 22) தொழில்நுட்ப ஆர்வலர். இவர் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் ரிமோட் மூலம் இயங்கும் கார் ஒன்றை உருவாக்கினார். இதையடுத்து தனது தொழில்நுட்பம் சார்ந்த தானியங்கி ஓட்டுநர் கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து செய்தி வெளியிடுமாறு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் முகமது ஆலிஜாவிடம் கேட்டுக்கொண்டார். போலீஸ் ஜீப் மீது விபத்து எனவே கடந்த 30-ந்தேதி அந்த காரின் தொழில்நுட்பம் குறித்து, இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில், பத்திரிகையாளர் ஆலிஜா காரின் முன் இருக்கையில் அமர்ந்து நேரலை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். பத்திரிகையாளர் காரின் சிறப்பம்சங்களை விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே உள்ளே இருந்த அவர் அவசரகால பிரேக்கை போட முயன்றும், கார் நேராகச் சென்று சாலையோரம் நின்று கொண்டிருந்த இஸ்லாமாபாத் போலீஸ் வேன் மீது பலமாக மோதியது. இணையவாசிகளின் கிண்டல் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது பாணியில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, "பாகிஸ்தானில் திறமைக்குக் குறைவில்லை, ஆனால் அது நேராக போலீசிடமே சென்று முட்டியுள்ளது" எனப் பலரும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர். டெஸ்லாவின் ஆட்டோ-பைலட் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டும், "போலீஸைக் கண்டதும் லஞ்சம் கொடுக்க கார் தானாகவே சென்று நின்றுவிட்டது" என்றும் மீம்களைப் பகிர்ந்து இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் ரன்வீர் ஷோரேயும் அந்த காணொளிக்கு எதிர்வினையாற்றி, "தானாக ஓடும் டெஸ்லாவுக்கு பாகிஸ்தானின் பதில்: மஸ்லா" என்று எழுதியுள்ளார். ஒரு பயனர், "என்ன ஒரு திறமை! அது மற்ற எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு நேராக போலீஸ் காருக்குள் சென்றுவிட்டது," என்று நகைச்சுவையாகக் கூறினார். மற்றொருவர், "உங்களை போலீசார் அடிக்கவில்லையா? நீங்கள் அதிர்ஷ்டசாலியா?" என்று கருத்து தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை இருப்பினும், அது ஒரு தொழில்நுட்பக் கோளாறால் நடந்த விபத்து என்பதால் இளைஞர் மீது போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும், பொது சாலைகளில் இதுபோன்ற சோதனைகளை நடத்தும்போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/driverless-car-crashes-into-police-vehicle-netizens-mock-saying-no-shortage-of-talent-in-pakistan



