சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரப் பேரணியினை மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- எச்.ஐ.வி. - எயிட்ஸ் விழிப்புணர்வு சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட தீவிர விழிப்புணர்வு பிரசாரப் பேரணியினை (Intensified IEC Campaign) மேயர் ஆர். பிரியா இன்று (03.09.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு பரிசோதனை, ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சை மற்றும் எச்.ஐ.வியுடன் வாழும் நபர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டை ஒழித்திடும் வகையிலான தீவிர எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேயரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேயர் தொடங்கி வைத்தார் இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மேயர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு திடீர் நடன நிகழ்ச்சியினைப் பார்வையிட்டார். பின்னர், அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா சித்தா கல்லூரிகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரப் பேரணியினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி பெரியமேடு சாலை வழியாக சென்று நேரு உள்விளையாட்டரங்கப் பகுதியில் நிறைவுற்றது. பேரணி மூலம் விழிப்புணர்வு இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்/மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ஏ.கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/hiv-awareness-campaign-for-the-public-mayor-priya-inaugurates-the-event




