புதுடெல்லி, 2029-ல் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் அமலாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் த.வெ.க. அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் எத்தனை? இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், குறைவாக மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் - நிக்கோபார், சத்தீஷ்கர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன. இதேபோல், நாடு முழுவதும் 4,123 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், குறைந்தபட்சமாக புதுச்சேரி மற்றும் சிக்கிமில் தலா 32 தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எதற்காக ஒரே நாடு; ஒரே தேர்தல்? நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று ஒரேபோல் இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கு, 5 ஆண்டு பதவிக்காலம் எப்போது முடிகிறதோ, அந்த நேரத்தில் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தல் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், தேர்தல் நடத்தை விதிகளால் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு இதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி, அவர்கள் தெரிவித்த கருத்துகளை கொண்டு அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான, அரசியலமைப்பு 129-வது சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை இது அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பா.ஜ.க. மக்களவை எம்.பி. பி.பி.சவுத்ரி இந்தக் கூட்டுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் கூட்டுக் குழுவினர், சட்ட நிபுணர்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் இந்த நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, "ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களின் தேர்தலை நடத்துவது கூட்டாட்சி அமைப்புகளுக்கு எதிரானது. இந்த யோசனையை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தினர். கூட்டம் முடிந்ததும், அதன் தலைவர் பி.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறும்போது, "ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் பலமுறை ஆலோசித்து விட்டோம். அவர்களில், 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துவிட்டனர். மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தால், இந்த திட்டத்தை 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலேயே அமல்படுத்தலாம்" என்று கூறினார். த.வெ.க. அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடியும் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகம் செய்தால், நடப்பு ஆண்டில் (2026) சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில், ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும். அதாவது, தமிழகத்தில் த.வெ.க. அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. இதேபோல், அடுத்த ஆண்டு (2027) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில், ஆட்சிக்கு வருபவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளில் முடிந்துவிடும். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் எதிர்க்கும் அதேபோல், 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சிக்கு வருபவர்களின் பதவிக்காலம் ஒரே ஆண்டில் முடிந்துவிடும். இதுபோன்று ஆபத்துகள் இருப்பதால், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை பா.ஜ.க. ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் எதிர்க்கும் என்றே தெரிகிறது. ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களின் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/one-nation-one-election-likely-to-come-into-effect-in-2029-will-tvk-rule-in-tamil-nadu-end-in-3-years




