சென்னை, முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள ஊழல் 'பைல்கள்' எப்போது வெளிவரும்? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான த.வெ.க. 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறது. காலியாக உள்ள 7 தொகுதிகள் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இடைத்தேர்தல் எப்போது? இந்த நிலையில், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடை நாளையுடன் (ஆகஸ்டு 24) முடிவடைய இருக்கிறது. விரைவில், இந்த 5 தொகுதிகள் உள்பட மொத்தம் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் தேவையாக உள்ளது. காரணம், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்தாலும், தனி மெஜாரிட்டி அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 107 இடங்களே த.வெ.க.வுக்கு கிடைத்தன. அதன்பின்னர், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. இதில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர ஏனைய 3 கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், அந்த கட்சிகளால் த.வெ.க. அரசுக்கு ஆபத்து வராது என்று நம்பலாம். ஆனால், மக்கள் பிரச்சினையை முன்வைத்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழ்நிலை உள்ளது. இடைத்தேர்தல் வெற்றி முக்கியம் அவ்வாறு நடந்தால், த.வெ.க. அரசு ஆட்டம் கண்டுவிடும். அதனால், இடைத்தேர்தல் வெற்றி என்பது த.வெ.க.வுக்கு முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 114 ஆக உயரும். இது மெஜாரிட்டுக்கு தேவையான 118-ஐ விட 4 குறைவுதான் என்றாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவோ, அல்லது ஏனைய கட்சிகளில் 2 கட்சிகளின் ஆதரவோ த.வெ.க.வுக்கு கிடைத்தாலே போதும், 5 ஆண்டு கால ஆட்சிக்கு பிரச்சினை எதுவும் வராது. பொதுவாக, இடைத்தேர்தல் முடிவுகள் என்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்தாலும், இந்த முறை அந்த சாதகம் த.வெ.க. அரசுக்கு தேவையாக உள்ளது. அதற்கு த.வெ.க. ஆயத்தமாகி வருவதும் சமீபத்திய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் சட்டசபை பேச்சில் வெளிப்பட்டது. முதல்-அமைச்சர் விஜய் பேச்சு அதாவது, கடந்த 19-ந் தேதிய சட்டசபை நிகழ்வில், அமைச்சர்கள் ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அந்த நேரத்தில் எழுந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:- நான் இதை சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன், இங்கு நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறை தொடர்பாக ஆய்வு செய்து, அது தொடர்பான விபரம் எனது மேஜையில் இருக்கிறது என சொன்னார். இடைத்தேர்தலில் நல்லது நடக்க வேண்டாமா? அவர் போகிற போக்கில், அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கின்றன. அதை 'ஓபன்' பண்ண வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது 'ஓபன்' பண்ண வேண்டுமோ, அப்போது, அது கரெக்டாக 'ஓபன்' செய்யப்படும். மக்களிடம் எப்போ பேசணும். என்ன பேசணும். எப்படி பேசணும். எல்லாம் பேசிவிட்டு தான், அன்பா. ஆசையா. எங்க எல்லாரையும் கொண்டு வந்து இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன், பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலிலாவது ஒரு சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? இவ்வாறு அவர் பேசினார். த.வெ.க. போடும் 'ஸ்கெட்ச்' இதன் மூலம் இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. 'ஸ்கெட்ச்' போட்டு தயாராகிவருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையே, சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மேஜையில் இருக்கும் பைல்களை சீக்கிரம் திறந்து பாருங்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் பயப்படமாட்டார்கள்" என்று பேசினார். இதனால், அந்த 3 பைல்களில் உள்ள விவரங்கள் எப்போது வெளிவரும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், எப்போது?, எப்படி? அந்த பைல்களை வெளியிடுவது என்பது குறித்து ஏற்கனவே த.வெ.க. திட்டம் வகுத்துள்ளதாம். இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு. அதாவது, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, முதல்-அமைச்சர் மேஜையில் உள்ள ஊழல் பைல்களில் உள்ள விவரங்கள் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வரும்போது, மக்கள் மத்தியில் த.வெ.க.வின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றியை எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை எப்படி தடுக்கப்போகின்றன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-corruption-files-on-chief-minister-vijays-desk-be-revealed-tvks-blueprint-for-facing-the-by-election



