கடந்த காலங்களில் கட்டுச் சோறு கட்டிக்கொண்டு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், புளியோதரைத்தான் கையோடு எடுத்துச் செல்வார்கள். அந்த புளியோதரையை, அப்படியே பாரம்பரியம் மாறாத சுவையில் புளி சாதமாக இங்கே தந்திருக்கிறோம். தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - ½ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8 பெருங்காயப்பொடி - ¾ டீஸ்பூன் நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் கடுகு - ½ டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை - ¼ கப் (தோல் நீக்கியது) புளி - பெரிய எலுமிச்சை பழம் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில், புளி சாதத்திற்கான மசாலா பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்காக, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். அதன்பிறகு, கொத்தமல்லி, மிளகு, வெந்தயம், 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். நன்கு வாசனை வந்தவுடன் அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, ½ டீஸ்பூன் பெருங்காய பொடி சேர்த்து ஆறவிடவும். அதன்பிறகு, அதை மிக்சி ஜாரில் எடுத்து நன்றாக பொடி ஆக்கவும். அடுத்து, கியாஸ் அடுப்பை மீண்டும் 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 4 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு பொறிந்து வந்தவுடன் ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கலந்துவிடவும். அடுத்து தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலையை சேர்க்கவும். அடுத்து அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறிவிடவும். அடுத்து ஊறவைத்த புளியை கரைத்து, புளி தண்ணீரை சேர்க்கவும். முதலில் தண்ணீராக இருப்பதுபோல் தோன்றும். தொடர்ந்து கொதிக்கும்போது, எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வரும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். புளி சாதத்திற்கான கிரேவி ரெடி. அடுத்து, உதிரி உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான அளவு கிரேவியை சேர்த்து கிளறினால் பாரம்பரிய முறையில், மணமான, ருசியான புளி சாதம் ரெடி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/sunday-special-how-to-make-aromatic-and-delicious-puli-sadam




