ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த விதமான பொது இடங்களையும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும், பொறுப்பேற்றுக்கொள்ளும் என்கிற பொறுப்பற்ற தன்மைதான் இன்று மக்கள் எளிமையாக பொதுஇடங்களை அசுத்தம் செய்யவதற்கு காரணமாக இருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிற இக்காலத்தில் கல்லிடைக்குறிச்சியில் லூர்துராஜா என்பவர், தாமிரபரணியின் குறிப்பிட்ட கரையோர பகுதியைச் சுத்தமாக்கி, பூங்கா அமைத்து 3 ஏக்கருக்கு பசுமைக் காட்டை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து லூர்துராஜாவிடம் பேசியபோது, "வீரவநல்லூர் என் சொந்த ஊர். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என் தங்கை உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், காலையில் வீட்டைப் பார்த்துக்கொண்டு, மதிய நேரத்தில் ஆற்றின் கரையோரம் வந்துவிடுவேன். தினந்தோறும் இங்கு வருபவர்களில் பலரும் நெகிழிப்பை, துணி இவற்றையெல்லாம் ஆற்றிலும், ஆற்றின் கரையோரத்திலும் வீசி விடுவார்கள். இவற்றை அள்ளி எடுப்பது சிரமம் என்றாலும் இதுவே என் தினசரி வேலையாகவே மாறிவிட்டது. நான் தனியே எங்கும் வேலைக்குச் செல்வதில்லை. பட்டன் செல்தான் இப்போதும் பயன்படுத்துகிறேன். காட்டைச் சுத்தமாக்குவதையே என் முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டேன். இங்கு வருபவர்கள் ஆற்றிலும், ஆற்றின் கரையோரத்திலும் சிறுநீர், மலம் கழித்துவிடுவார்கள். இன்னும் மனிதர்கள் மாறவில்லை. ஆற்றிலும், கரையோரத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூடாது என்கிற அடிப்படை புரிதல்கூட நம் மக்களிடம் இருப்பதில்லை. படித்தவன், படிக்காதவன் என்று அனைவரும் இதே வேலையைத்தான் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். இப்படி ஒரு முறை இங்கு குளிக்க வந்த இளைஞர் ஒருவர் தன் இயற்கை உபாதைகளைக் கழித்து ஆற்றை அசுத்தபடுத்தினார். நான் அறிவுரை கூறினேன் என்பதால், என்னை செருப்பால் அடித்தார். இந்த மாதிரியான பல மனிதர்களைக் கடந்துதான் என் தினசரி வாழ்க்கை செல்கிறது." எப்படி ஆற்றின் கரையோரம் 3 ஏக்கருக்கு காட்டை உருவாக்கினீர்கள்? "PWD- ல் இருந்து முதலில் ஒரு மரம் நட்டார்கள். பின்பு பராமரிக்காமல் போய்விட்டார்கள். நானும் என் ஐந்து தம்பிகளும் இணைந்துதான் இந்த இடத்தைப் பராமரித்து வருகிறோம். குடத்தில்தான் நீரெடுத்து மரங்களுக்கு நீர்ப் பாய்ச்சினோம். இன்று அவை 3 ஏக்கராக வளர்ந்துள்ளது. உள்ளே தூரம் சென்றால் பாம்புகள் இருக்கும். இந்தக் காட்டைச் சுற்றி வலைபோடக் காரணம், உள்ளே இங்கு வரும் பலரும் காட்டைச் சுற்றிப் பார்க்காமல், உள்ளே மதுகுடிக்கவும், ஆற்றையும், ஆற்றின் கரையோரங்களையும் நாசப்படுத்தவுமே வருகிறார்கள். இதனால்தான் இவ்விடத்தை அதிகமாக தினமும் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. எப்போதும் எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும் என்ற பொறுப்பற்ற தன்மையோடு இருப்பது என்பது மோசமான குணம் ஆகும். நம் மக்கள்தான் இப்படி இருக்கிறார்கள். நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்குரிய அடிப்படை அறிவற்று வாழ்கிறோம். இந்த தாமிரபரணி நீரைத்தான் 5 மாவட்ட மக்கள் குடிக்கிறார்கள் என்பதை அறிந்தும் அழுக்குத் துணிகளையும், குப்பைகளையும் கொட்டுவது, ஆற்றில் குளிக்கையில் சோப்பு பயன்படுத்துவது என்று ஆற்றை நாசமாக்கும் எல்லா வேலைகளையும் இங்கு மனிதர்கள் செய்கிறார்கள். தற்போது இவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருக்க என் தம்பிகள் தான் மிக முக்கிய தூண்களாக உறுதுணையுடன் நின்றார்கள். தற்போது அவர்கள் படிப்பு, வேலை என்று வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களல்லாமல் இம்முயற்சி மிக கடினமாக அமைந்திருக்கும். ஆறறிவைக் கடவுள் கொடுத்தும் ஆற்று மணலைக் கொள்ளையடிப்பது, ஆற்றில் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிவற்ற செயல்களை மனிதர்கள் செய்கிறார்கள்." குப்பைக் கிடங்கைப் பூங்கா போல் மாற்றியுள்ளீர்களே. "ஆம். பஞ்சாயத்திலிருந்து குப்பைகள் கொட்டி குப்பைக்கிடங்காக இங்குள்ள இடம் முன்னே இருந்தது. அங்கு 25 அடிக்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு 10 அடிகளுக்கு குப்பைகளை அப்புறப்படுத்தி மண் தூவி, மரங்களை நட்டினோம். அவை 18 வகையான பூ மரங்கள் சேர்த்து 25 வகையான மரங்கள் உள்ளது. அவை இன்று வளர்ந்து மரமாக நிற்கிறது. இங்கு வந்து செல்பவர்களில் மரம் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு மரக்கன்றுகளையும் கொடுக்கிறோம். உண்மையாக மரம் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு மட்டுமே அவற்றைக் கொடுக்கிறோம். மேலும் கல்லிடைக்குறிச்சி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் பழைமையான 122 அடி நீளம் கொண்ட படித்துறை சிதலமடைந்த நிலையில், அதைச் சீரமைத்தும், படிக்கு இருபுறமும் பொதுமக்கள் ஏறி, இறங்க ஏதுவாக இரும்பு கைப்பிடி அமைத்தும், படிக்கு மேல் 1000 சதுர அடியில் கான்கிரீட் அமைத்தும், பழைய மண்டபம் ஒன்றை சீரமைத்தும், அதனைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தும், அலக்கல் பதித்தும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உதவியுடன் ஐந்து மாதங்கள் தொடர்ந்து பணி செய்தோம். ரூபாய் நான்கு லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது." ``அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சக்திநாதன் என்பவரே மாவட்ட ஆட்சியரை இவ்விடம் அழைத்து மரம் நடவைத்தார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அவர்கள் பூங்காவைத் திறந்துவைத்தார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களும் நிறைய உதவி செய்திருக்கிறார். மொத்தத்தில் தற்போது 500 மரங்களுக்கும் மேலாக பராமரித்து வருகிறோம். எங்களுடைய பணிக்காக திருநெல்வேலிக்கு தேசிய விருது கிடைத்தது. அவ்விருதை ஷில்பா பிரபாகர் பெற்றுக் கொண்டார். பிறகு அவர் எங்களை வாழ்த்தினார். என்னுடைய இந்த செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது, நிதியுதவி வழங்குவது என் தம்பி செந்தில்குமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர்தான். செந்தில்குமார் காலையில் கடையைப் பார்த்துக்கொண்டாலும் அவரும் மாலையானால் இங்கு கிளம்பி வந்துவிடுவார். அவரும் என்னோடு இணைந்துதான் இந்த பணி செய்து வருகிறார். பத்மநாபன், சங்கரநாராயணன், முப்பிடாதி, தங்கராஜ் ஆகிய தம்பிகளால் இன்று இந்த கரையோரத்தை இவ்வளவு சுத்தமாக, அழகாக மாற்றியுள்ளோம். மண்டபங்கள், படித்துறை போன்ற இடங்களையும் சீரமைத்து வருகிறோம். செந்தில்குமாரின் தங்கை சங்கரி இங்கு நிறைய விழிப்புணர்வு வாசகங்களை எழுதியுள்ளார். இவ்வாறு ஒன்றிணைந்து செயல்படும்போது நிறைய பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால் என் தம்பிகள் இல்லாவிட்டால் இவையனைத்தும் ஈடேறியிருக்குமா? என்பது சந்தேகம் தான். நான் இப்படிப்பட்ட பணிகளை செய்ய காரணம் இறைவனின் அருளே. என்னுடைய இந்த செயல்பாடுகளுக்கு 2025-ல் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கியுள்ளனர். மனிதர்களும் வேண்டுமென்றே எதையும் செய்யவதில்லை. அனைத்தும் அறியாமல் செய்வதுதான். என்னைப்போல் ஆற்றின் கரையோரப் பகுதிகளைக் அந்தந்த பகுதியின் மக்கள் பாதுகாத்தாலே ஆறு சுத்தமாகி விடும். இக்காலத்தில் அவ்வாறு யாரையும் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. 2017-ல் இருந்து இதை கவனித்து வருகிறேன். தாய் உயிரோட்டமாக இருந்தால்தான் தாய்ப்பால் ஆரோக்கியமானதாக இருக்கும்.அது போல்தான் நதியும்" எனக் கூறி, தன் பணிகளால் மனம் நிறைந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/environment/lourduraja-tamirabarani-green-initiative




