சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுவரை அரசு வழக்கறிஞர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை; நேற்று மாலை முதல் தான் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது. முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு அரசு வழக்கறிஞர் நியமனம் நடைபெறுகிறது. தகுதியானவர் மட்டுமே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவார்கள். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் யாராவது பணம் பெற்றால் புகார் தெரிவிக்கலாம். எங்காவது முறைகேடு நடைபெறுவதாக புகார் கொடுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எந்த பாகுபாடும் இல்லை. இப்போது கொடுக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் என்பது ஆறு மாத காலத்திற்கானது மட்டுமே. செயல்பாடுகளை பொறுத்து 6 மாதத்திற்கு பிறகே அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக்கப்படுவர். அதிகபட்சம் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் தேவைப்பட்டால் கூடுதலாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் அரசு தயாராக உள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு ரீதியாக, காவல்துறை ரீதியாக முறையாக சரிபார்த்து பின்னரே அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகின்றனர். திமுக ஆட்சியில் மாவட்டச் செயலாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்தனர். 45 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அரசு வழக்கறிஞர் நியமனம் நேர்மையாக நடைபெறுகிறது. அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவே முதலில் தற்காலிக நியமனம். அரசு வழக்கறிஞர்கள் திறமையாக செயல்படவில்லை என்றால் தொடர்ந்து பணியாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்து மாணவியிடம் கேள்வி கேட்டது சர்ச்சையான நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளிக்கையில், “தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் எனத் தெரியவில்லை. அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆய்வு நடத்தக்கூடாது. தி.மு.க. ஆட்சியில் கட்சி விழாக்களுக்கு அரசு பள்ளி மேஜை, நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன' என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-government-lawyers-is-done-100-honestly-minister-nirmal-kumar




