சென்னை, பழனி கோவில் நில விவகாரத்தில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பொது அமைதியை குலைப்பது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை கோர்ட்டில் வினோத் சூர்யகுமார் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், பேச்சுரிமை கருத்துரிமை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் பிரபல ஊடகவியலாளர். கோவில் நில நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதன் மூலம் பொது நலனுக்கு பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்த பதிவுகள் வெளியிடப்பட்டன. அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை" என வாதிட்டார். போலீசார் தரப்பில், "மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது. நீதிபதி கூறியதாவது:- ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும். அரசையோ, அதன் அமைச்சர்களையோ விமர்சிப்பது, அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது. கோவிலுக்கு சொந்தமான சொத்து, சொற்ப விலைக்கு விற்கப்பட்டது என்பதோ அல்லது அமைச்சரின் உறவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதோ மதம், இனம், மொழி, சாதி, சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ, ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது. அவதூறான, தரக்குறைவான கருத்துகளை கூறுவது அல்லது தவறான தகவல்களை வெளியிடுவது, அதிகபட்சமாக இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் மட்டுமே தவிர, அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல. மனுதாரர் தினமும் காலை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு கூறி நிபந்தனை ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-criticising-ministers-not-crime-against-public-peace-says-chennai-court




