மும்பை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவு நாளான இன்று மும்பையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மும்பையில் கடந்த 14-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. பொதுமக்கள் வீடுகளிலும், மண்டல்கள் சார்பிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தனர். மும்பை முழுவதும் ஆயிரக்கணக்கான மண்டல்கள், லட்சக்கணக்கான வீடுகளில் மக்கள் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதேபோல் மும்பை புறநகர் பகுதிகள் மற்றும் மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோல பொதுமக்கள் வீடுகள், மண்டல்களில் பிரதிஷ்டை செய்த விநாயகரை 3, 5, 7, 9 நாட்களுக்கு பிறகு கடற்கரை, குளங்கள், ஏரி மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செயற்கை குளங்களில் கரைத்தனர். இன்று அனந்த சதுர்த்தசி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 11 நாட்களாக மும்பை நகரம் பக்தியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விழாக்கோலம் கொண்டிருந்தது. 12 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அனந்த சதுர்த்தசியுடன் நிறைவடைகிறது. இந்நாளில் பக்தர்கள் விநாயகர் சிலைகளை இயற்கையான நீர்நிலைகளிலோ அல்லது செயற்கைக் குளங்களிலோ கரைத்து விடை கொடுக்கின்றனர். லால்பாக்சா ராஜா இன்று மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா உள்ளிட்ட பிரபலமான மண்டல் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலைகளுக்கு பாரம்பரிய முறைப்படி பூஜைகள் மற்றும் ஆரத்தி நடைபெற்றதைத் தொடர்ந்து, பல முக்கிய அமைப்புகளின் (மண்டல்களின்) விநாயகர் ஊர்வலம் தொடங்கியது. லால்பாக்ராஜா விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது. 'கணபதி பாபா மோரியா, மங்கல மூர்த்தி மோரியா' என முழக்கம் எழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் அணிவகுத்து செல்கின்றனர். இந்த சிலை சின்ச்போக்லி, பைகுல்லா, டு டேங்க்ஸ், பிரார்தனா சமாஜ் வழியாக கிர்காவ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில் லால்பாக் ராஜா விநாயகர் மிதந்து செல்கிறார். நாளை காலை 8 மணியளவில் சிலை கடலில் கரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மும்பை புறநகர் பகுதிகள் மற்றும் மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் விநாயகர் ஊர்வலங்கள் (விசர்ஜன ஊர்வலங்கள்) தொடங்கின. விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வு பெரும்பாலும் இன்று நள்ளிரவு வரை நீடிக்கும். சில இடங்களில் நாளை அதிகாலை வரையிலும் நீடிக்கும். மும்பையில் விநாயகர் ஊர்வலம் மும்பையில் 450 இடங்களில் கரைக்க ஏற்பாடு அனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் லட்சக்கணக்கான மக்கள் கிர்காவ் கடற்கரை, பரேல், சின்ச்போக்லி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்தை காண குவிந்துள்ளனர். இதேபோல தாதர், ஜூகு, வெர் சோவா, மாகிம் உள்ளிட்ட கடற்கரைகளில் அதிகளவில் மக்கள் திரண்டுள்ளனர். மும்பை மாநகர பகுதி முழுவதும் விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்காக 450 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஜூகு, வெர்சோவா, சிவாஜிபார்க், மாகிம், கிர்காவ் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் இயற்கை நீர்நிலைகள் என 67 இடங்களும், 383 செயற்கை நீர்நிலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவுக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கடற்கரை பகுதிகளில் 1,132 உயிர்காக்கும் வீரர்கள், 6 ஆயிரத்து 52 ராட்சத விளக்குகள், 85 ஆம்புலன்சுகள் மற்றும் 10 மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 228 கட்டுப்பாட்டு அறைகளும், 75 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனந்த சதுர்த்தசியையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பை முழுவதும் 6 இணை போலீஸ் கமிஷனர்கள், 9 கூடுதல் கமிஷனர்கள், 38 துணை கமிஷனர்கள், 66 உதவி கமிஷனர்கள், 3 ஆயிரத்து 213 போலீஸ் அதிகாரிகள் உள்பட 24 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிவிரைவு படையினர், மாநில ரிசர்வ் போலீசார், போர்ஸ் ஒன், கலவர தடுப்பு பிரிவினர், டிரோன் தடுப்பு பிரிவினர், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் கிடந்தால் பக்தர்கள் 100, 112 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/anant-chaturdashi-grand-procession-for-immersion-in-mumbai




