சென்னை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நடப்பு 2026-27 ஆம் ஆண்டு நெல் சாகுபடிக்கும், குடிநீருக்குமாக செப்டம்பர் 1ஆம் தேதி அன்று மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் திறக்க உள்ளதை வரவேற்கிறோம். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர். திருச்சி ஆகிய மாவட்டங்களில் வேளாண்மைக்கும், பிற மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், வாழ்வு நிலைக்கும் அடிப்படையானது காவிரி நீர் என்ற நிலையில் ஜீன் 12 ல் திறக்க வேண்டிய மேட்டூர் அணை இரண்டரை மாதம் கழித்து திறக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது, குடிநீர் மிகப் பெரிய தட்டுப்பாடாக உள்ளது.டெல்டாவில் நிலத்தடி நீர் மட்டம் வெகு கீழாக இறங்கி விட்டது. 700 நீர் இருப்பு நிலைகளில் நீர் இல்லை. ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் புல் தரை காய்ந்து கருகி விட்டது. ஆறில் ஒரு பங்கு நிலத்தில் மட்டுமே சாகுபடி செய்த குறுவைப் பயிர்களும் சில இடங்களில் கருகி வருகிறது.தென்னை மரங்கள் உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் கருகத் தொடங்கி விடடன. இந்த நிலையில் திறக்கப்படும் தண்ணீர் என்பது நல்லது. மக்களின் வாழ்வு நிலை காத்திட, வெப்பநிலை உயர்வை குறைத்திட நிலத்தடி நீர் உயர்விற்கும் வாய்ப்பாகும் என்ற நிலையில் நல்லது. கால நீர் பங்கீடு காவிரி நீர் பங்கீட்டுக்கான இறுதி தீர்ப்பின் படி மூன்றில் இரண்டு பங்கு நீரை ஜூன் முதல் செப்டம்பர், ஆகிய 4 மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்திட வேண்டும் என்ற தீர்ப்பே குறுவை சாகுபடிக்காகத்தான். ஏனெனில் தென்மேற்கு பருவ மழை தமிழகத்தை விட கர்நாடகத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் குருவை நெல் சாகுபடி என்பது முழுமையாக கர்நாடகத்தை நம்பியே உள்ளது என்ற நிலையில் தான் இந்த தீர்ப்பு. ஆனால், பற்றாக்குறை கால நீர் பங்கீடு படி கூட திறந்து விடாது கர்நாடக அரசு அடம்பிடித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் தலையீட்டில் நமக்கு தண்ணீர் திறந்து வருகிறது. இந்த நிலையில் கபினியியில் திறக்கப்படும் நீருக்கும், பிலிகுண்டலு வரும் நீருக்கும் குறைபாடு உள்ளது. கபினியில் திறக்கப்படும் நீர் வெளி கால்வாய் மூலம் அங்கேயே பாசனத்திற்கு திருப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. டெல்டா பாசனம் நீர் வரத்தை பொறுத்து 45 நாட்களுக்கு 10,500 க.அடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடிநீருக்கும், விவசாயிகள் பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு டி.எம்.சி.க்கும் குறைவான இந்த நீர் டெல்டா பாசனத்திற்கு பயன்பட வாய்ப்பில்லை. திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கே 4 நாட்கள் கழித்து தான் வரும். வந்தாலும் கீழே 4 ஆயிரம் கன அடி தான் வரும். கடைமடை வரை செல்லவே 10 நாட்களுக்கு மேலாகும். ஆறுகளில் செல்லுமே தவிர பாசன வாய்க்கால்களில் ஏறி செல்ல வாய்ப்பில்லை. இந்தத் தண்ணீர் நிச்சயம் இப்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும். வெப்ப நிலை தாழும். தென்னை போன்ற மரங்களுக்கு நீர் ஆதாரம் ஓரளவு தரும். 16,000 கன அடி தண்ணீர் ஆனால் இந்த தண்ணீரை நம்பி வேளாண் சாகுபடி பணிகளை தொடங்கிட அறிவுறுத்துவது என்பதும், நம்புவது என்பதும் சாத்தியமில்லை. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து இதன் பின்னர் 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறந்தால் தான் பாசனத்திற்கு வாய்ப்பாகும். தென்மேற்கு பருவமழை செப்டம்பரில் நிறைவுபெறும் நிலையில் கர்நாடகத்திற்கு மழைக்கான வாய்ப்புள்ளது. எனவே அங்கு நிரம்பும் தண்ணீரை தமிழகத்திற்கு பெற வாய்ப்புள்ளது. தற்போதைய மேட்டூர் அணை நீர் இருப்பு அடுத்து கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இச்சூழலில் தற்பொழுது திறக்கப்படும் தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகளை தொடங்க அரசு அறிவுறுத்துவது என்பது விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளில் இக்கட்டான நிலைகளை ஏற்படுத்தும். தற்போது திறக்கப்படும் தண்ணீரை நிலத்தடி நீர் மட்ட உயர்விற்கு மட்டுமே பயன்பாடாகும். அடுத்து ஒரு வாரத்தில் 16,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அது முதல் சம்பா சாகுபடி பணிகளை முழு வேகத்தில் தொடங்கிட விவசாயிகளுக்கு காலத்தில் அறிவுறுத்திட வேண்டும். உரிய நடவடிக்கை மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முழுமையாகவோ, முறை பாசனம் வைத்தோ சம்பா மத்திய கால நெல் விதைகளை விதைக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். அக்டோபர் இறுதியில் வரும் வடகிழக்கு பெருமழையிலிருந்தும் நெல் பயிர்கள் கதிர் வராத நிலையில் பாதுகாக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் துறை, நீர்வளத்துறை அமைச்சர்கள், நீர் வள துறை உயர் அலுவலர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/16000-cubic-feet-of-water-should-be-released-from-september-10-farmers-association-demands-the-government




