சென்னை, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தின் சரக்கு ஏற்றுமதி மதிப்பு 2024-25 நிதி யாண்டில் இருந்த அளவிலிருந்து 13.7 சதவீதம் உயர்ந்து 59.3 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.5.1 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. உலகளவில் வர்த்தக பதற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலைகள் நிலவியபோதும் தமிழகம் இந்த சாதனையை படைத்துள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியாவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. குறிப்பாக மின்னணு சாதனங்கள், செல்போன்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்து 19.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு 100 டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களில் 42 டாலர் மதிப்புள்ள பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு கடந்த 2021-22-ல் 8.5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 13.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதியின் தமிழகத்தின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி மதிப்பில் தமிழகம் இன்னும் நாட்டின் 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக இருந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்றுமதி மதிப்பில் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்கள் முதல் இரு இடங்களில் தொடர்கின்றன. ஆனால் 2025-26-ல் தமிழகம் 13.7 சதவீதம் வளர்ச்சி, கர்நாடகம் 12.9, அரியானா 7.7, மராட்டியம் 6.4, உத்தரபிரதேசம் 3.6, மேற்கு வங்காளம் 1.7 சதவீதம் வளர்ச்சி பதிவாகி உள்ளது. அதே நேரத்தில், குஜராத் 4.9 சதவீதம் சரிவு கண்டுள்ளது. அதேபோல ஆந்திரா 3.9, ராஜஸ்தான் 2.6, தெலுங்கானா 27.5 சதவீத சரிவை கண்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக ஸ்மார்ட்போன் உற்பத்தி மையங்கள் விரிவடைதல், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்தல், என்ஜினீயரிங் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி, ரசாயனப் பொருட்கள் ஏற்றுமதி உயர்வு, உலக நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்தல் ஆகியவை என குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-is-the-leading-state-with-the-highest-growth-in-goods-exports-central-government-information




