திரையுலகைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது அதன் திரையரங்க வசூலை வைத்தே பெரும்பாலும் கணிக்கப்படுகிறது. ஆனால், காலமாற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப வெற்றிக்கான இலக்கணங்களும் மாறிவருகின்றன. அந்த வகையில், 2017-ம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் படுதோல்வியைத் தழுவிய 'ஜெய ஜானகி நாயகா' (Jaya Janaki Nayaka) என்ற தெலுங்குத் திரைப்படம், இணையத்தில் வெளியாகி 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்து இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. Jaya Janaki Nayaka இயக்குநர் போயபாடி சீனு இயக்கத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான ஆக்ஷன் திரைப்படம் இது. சுமார் ரூ. 40 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ரூ. 20 கோடியை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. எனினும், இப்படம் ஹிந்தியில் 'கூன்ஹார்' (Khoonkhar) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு 'பென் மூவிஸ்' என்கிற நிறுவனத்தால் யூடியூபில் பதிவேற்றப்பட்டது. அங்கிருந்துதான் இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் மறுபிறவி தொடங்கியது. யூடியூபில் பதிவேற்றப்பட்டவுடன் இப்படம் ஒரே இரவில் வைரலாகிவிடவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுகச் சிறுக மக்களின் கவனத்தை ஈர்த்து இந்த 100 கோடி பார்வைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன: வட இந்திய ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகளும், அழுத்தமான குடும்ப உணர்வுகளும் இப்படத்தில் நிறைவாக இருந்தன. பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் புரிந்துகொண்டு, யூடியூப் தளம் தொடர்ந்து இந்தப் படத்தைப் புதிய பார்வையாளர்களுக்குப் பரிந்துரை செய்ததும் இதன் தொடர் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. Jaya Janaki Nayaka எந்தவொரு திரையரங்க மறுவெளியீடும் இன்றி, டிஜிட்டல் தளத்தில் மட்டுமே ஒரு இந்திய முழுநீளத் திரைப்படம் இத்தகைய சாதனையைச் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்த வெற்றியைப் படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர். இயக்குநர் போயபாடி சீனு, "1 பில்லியன் பார்வைகள், 1000 மில்லியன் இதயங்கள், 100 கோடி உணர்வுகள், 1 திரைப்படம். உலகிலேயே இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் இதுதான்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், "ஜானகி கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது" என்று கூறி, ரசிகர்களுக்கும் இயக்குநருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். View this post on Instagram தென்னிந்தியப் படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து தொலைக்காட்சிகளிலும் யூடியூபிலும் வெளியிடும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. அல்லு அர்ஜுனின் 'புஷ்பா', யஷ்ஷின் 'கே.ஜி.எஃப்' போன்ற பான்-இந்தியப் படங்களுக்கு வட இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உருவாகியிருப்பதற்கு இந்த டப்பிங் கலாசாரமே அடிப்படை காரணம். Jaya Janaki Nayaka ஒரு படைப்பு ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவினாலும், அது தனக்கான சரியான பார்வையாளர்களைச் சென்றடையும் போது நிச்சயம் கொண்டாடப்படும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சிறந்த சான்று. இந்த டிஜிட்டல் உலகில் திரையரங்கங்கள் மட்டுமே ஒரு படத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில்லை; நல்ல கதையும், உருவாக்கமும் இருந்தால் எவ்விதப் பெரிய விளம்பரங்களும் இன்றி சாதனைகளை நிகழ்த்த முடியும். Lingam Review: பரபரக்கும் 80-ஸ் கேங்ஸ்டர் வெப் சீரிஸ் - நம்மை கட்டிப் போடுகிறதா இந்த `லிங்கம்'? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/tollywood/jaya-janaki-nayaka-1-billion-views-record-tamil




