சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்ல இன்றளவும் ஒரு முறையான சாலை வசதி இல்லை. அரை நூற்றாண்டாக ஒற்றையடிப் பாதையையே நம்பியிருக்கும் தகவலறிந்து நேரில் சென்று பார்வையிட்டோம். பெருமாள் கோவில், மாட்டுச்சந்தை, எம்.செட்டிப்பட்டி பிரிவு சாலை மற்றும் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் என அன்றாடம் நடமாடும் முக்கிய இடங்களுக்குச் செல்ல இந்த ஒரே பாதையைத் தவிர வேறு வழியில்லை. மாட்டு வண்டி பாதை. இன்று நடப்பதே போராட்டம்! அங்குள்ள மக்கள் கூறுவதாவது, "சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாட்டு வண்டிகள் ஒன்றையொன்று தாராளமாகக் கடந்து செல்லும் அளவுக்கு இந்தப் பாதை அகலமாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு இருசக்கர வாகனத்தைக் கூட நிம்மதியாக ஓட்டிச் செல்ல முடிவதில்லை" என வேதனையோடு கூறுகின்றனர். மேலும், பாதையின் இருபுறமும் உள்ள சிலர் நிலத்தை ஆக்கிரமித்து, முள் செடிகளை வளர்த்து பாதையின் அகலத்தைக் குறுக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இதனுடன் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் பாதையிலேயே தேங்குவதால், மழைக்காலங்களில் வழித்தடம் முழுவதுமாக சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தினமும் இதில் வழுக்கி விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது என்கின்றனர் ஆம்புலன்ஸ் கூட வர முடியாது! சாலை வசதியின்மை இவர்களின் அன்றாடப் போக்குவரத்தை மட்டுமல்ல, அவசர கால வாழ்வாதாரத்தையும் சேர்த்தே முடக்கியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத சூழலே நிலவுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டும் என்றாலும் அரை கிலோமீட்டர் தூரம் சுமந்து வர வேண்டியுள்ளது. தபால்காரர், பால் வியாபாரிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் தினமும் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதுதான் எங்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது என்கின்றனர் ஊர் மக்கள் மனு மேல் மனு. தீர்வுதான் இல்லை! பிரச்சினை குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பாதையை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்துத் தரக் கோரியுள்ளனர். மனுவுடன் சர்வே வரைபடம் மற்றும் ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. "எங்கள் வீடுகளுக்குச் செல்ல ஒரு முறையான பாதை வேண்டும் என்பதைத் தவிர வேறு பெரிய கோரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. பல தலைமுறையாக மனு கொடுத்து வருகிறோம், எங்களின் அவல நிலைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும்?" என்பதே மக்களின் கேள்வி! அதிகாரிகள் தரப்பு சொல்வது என்ன? இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, "அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலரின் குறுகிய மனப்பான்மையே இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணம். மீண்டும் அந்தப் பகுதியை முறையாக அளவீடு செய்ய அரசுக்கு மனு அளிக்கப்பட்டால், நிலத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/m-chettipatti-villagers-50-year-wait-for-a-1-km-road




