சென்னை, உத்தரப்பிரதேச தனியார் நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் (MTC) பேருந்துகளில் காலியாகவுள்ள 1,797 நடத்துநர் பணியிடங்களை, 61.56 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 'எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்' (S.S. Enterprises) என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசுப்பணியிடங்களில் ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதைக் கைவிட்டு, நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று போராடி வரும் வேளையில், உத்தரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ள ஊழியர்களின் உரிமைப்பறிப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயலாகும். தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களை உத்தரப்பிரதேச மாநில நிறுவனத்தின் மூலம் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதற்குத்தான் இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா முதல்வர் அவர்களே? உத்தரப்பிரதேச நிறுவனம் தமிழக இளைஞர்களைப் பணியமர்த்துமா? அல்லது இந்தி பேசும் வடமாநில இளைஞர்களைப் பணியமர்த்துமா? அப்படியென்றால் அது மறைமுக இந்தி திணிப்பிற்கு வழிவகுக்காதா? ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள், தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சலகங்கள் உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி பேசும் அதிகாரிகளால் தமிழ்நாடு மக்கள் பாதிப்புக்கு ஆளாவது போதாது? தமிழ்நாடு பேருந்துகளிலும் இனி மொழி புரியாத வடமாநிலத்தவரால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்க வேண்டுமா? தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தபோதே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதற்கான பலனை கர்நாடக முதல்வரின் பதிலடியால் தற்போது தவெக அரசு எதிர்கொள்கிறது. கர்நாடக வனத்துறையால் 3 தமிழர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு, எங்கள் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று காட்டமாக கர்நாடக முதல்வர் எதிர்வினை ஆற்றும் அளவுக்கு, மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு இறுக்கமாக இருக்கின்றது. கர்நாடக முதல்வரின் அடாவடி பதில் ஏற்புடையது இல்லை என்றாலும், அரச நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவரின் தலையீடு இருக்க கூடாது என்ற அத்தகைய உறுதியான நிலைப்பாடு தவெக அரசுக்கு ஏன் வரவில்லை? தவெக அரசு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது? இது மாநில இறையாண்மைக்கும், தன்னாட்சிக்கும் எதிரானது இல்லையா? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப்பணியிடங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்துவோம், என்று வாக்குறுதியளித்த தவெக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது வேலையில்லாமல் திண்டாடும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அரசுப்பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்துவிட்டு, வேலையில்லா தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்று தவெக அரசு ஏமாற்றுவது வெட்கக்கேடானது. இது அரசுப்பணிக்காக இரவும் பகலும் அயராது படிக்கும் தமிழிளம் தலைமுறை பிள்ளைகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் பணியிடங்களை உத்தரபிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நிரந்தர அரசுப் பணியாளர்களாக, தமிழ்நாடு அரசே தெரிவு செய்து நியமிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/private-firm-appointments-in-transport-corporations-seeman-condemns




