காஞ்சீபுரம், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத்தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உண்டான பழமையான தலமாக விளங்குவது காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், இந்த கோவிலில் உற்சவ காலங்களில் பயன்படுத்துவதற்காக வெள்ளித்தேர், மகாரதம் எனும் மரத்தேர் போன்றவை உள்ளது. 3,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் உற்சவ காலங்களில் பயன்படுத்த தங்கத்தேர் செய்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரையின்படி 25 அடி உயரத்துடன். 13 அடி அகலத்துடன், 22 கிலோ 306 கிராம் தங்க முலாம் பூசிய தகடுகளை கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில் கலைநயத்துடன் புதிதாக தங்கத்தேர், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் செய்து முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கத்தேரை அளவீடு செய்தும், மதிப்பீடு செய்தும் பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு கோவிலில் ஏற்றுக்கொண்டனர். தங்கத்தேரோட்டம் இதை தொடர்ந்து காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத்தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் சாமி புதிய தங்கத்தேரில் எழுந்தருள மாலை 7 மணி அளவில் தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 108 தவில் நாதஸ்வர வித்வான்கள் வாசிக்க, 1,000 சிவனடியார்கள் சிவவாத்தியங்கள் ஒலிக்க, திருப்பூர் காவடி குழு. கொங்கு மண் டல கும்மியாட்டம், சிலம்பாட்டம் காஞ்சீபுரத்தின் நான்கு ராஜ வீதிகள் வழியாக விமரிசையாக நடைபெற உள்ள தங்கத்தேரோட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய சங்கராச்சாரியார், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனர். தங்கத்தேரோட்டத்தில் மடாதிபதிகளும், ஆதீனங்களும். ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் உறுப்பினர்களும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை உள்ளிட்டோரும், நகரின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்று கோவில் செயல் அலுவலர்கள் சீனிவாசன், கதிரவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/golden-chariot-procession-at-ekambaranathar-temple-kanchipuram-will-be-held-on-the-12th




