மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விபத்துக்குள்ளான இந்த நான்கு மாடிக் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மான்கூர்டு ஜனதா நகர் பகுதியில் நேற்று இரவு நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில், நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இடிபாடுகளில் சிக்கிய நபியா (2), நிஹால் (6), அலியா (7), முனாஃப் (7), முஸ்கான் (14) ஆகிய 5 குழந்தைகள், சோனி (32) என்ற பெண் ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இரவு 8.30 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் நவ்நாத் பான் தெரிவித்தார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கவுன்சிலர் விஜய் உபலே விபத்து விபத்து குறித்து கூறுகையில்,``மிக மோசமான நிலையில் இடிந்து விழும் தருவாயில் இருந்த இரண்டு கட்டடங்களை, ஞாயிற்றுக்கிழமை மதியமே அதிகாரிகள், குடியிருப்பாளர்கள் சேர்ந்து காலி செய்திருந்தனர். ஆனால் ஆபத்தை உணராமல், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பல உள்ளூர் மக்கள் மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் திரும்பிய சில மணி நேரங்களிலேயே இந்த பயங்கர கட்டட விபத்து நிகழ்ந்துள்ளது'' என்று குறிப்பிட்டார். மும்பை மேயர் ரிது தாவடே இந்த விபத்து குறித்து கூறுகையில்,'' வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட போதிலும், மக்கள் தொடர்ந்து விதிகளுக்குப் புறம்பாக இது போன்ற சட்டவிரோத கட்டடங்களில் வசித்து வருகின்றனர். நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகும் மக்கள் அந்த ஆபத்தான கட்டடங்களில் தொடர்ந்து வசித்து வருவதோடு, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை மீண்டும் மீண்டும் புதுப்பித்து அங்கேயே வாழ்கின்றனர்'' என்றார். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேலும் பல கட்டட விபத்துகள் பதிவாகியுள்ளன. பேலாப்பூரில் சனிக்கிழமை ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. நவி மும்பை மற்றும் கல்யாண்-டொம்பிவிலி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பன்வெல் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததைத் தொடர்ந்து, குறைந்தது 435 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதே போன்று டோம்பிவிலி பகுதியில் உள்ள மைத்ரி ருக்மிணி சதன் மற்றும் 'சாயா' ஆகிய இரண்டு குடியிருப்பு கட்டடங்களைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மும்பை பெருநகரப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 300-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன; கடந்த 24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டு வெவ்வேறு மர விபத்துகளில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஐந்து நாள்களில் மரங்கள் விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மும்பையில் பெய்த கனமழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மும்பை விமான நிலையத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு ஓடுதளம் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 13 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/environment/disasters/heavy-rains-batter-mumbai-6-dead-including-5-children-as-four-storey-building-collapses




