சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த அந்தப் பெண், இணையதள திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த அலி ஹர்மான் என்பவர், இணையதள திருமண தகவல் மூலம் இளம்பெண்ணுக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்து பேசி வந்தனர். திருமணம் இந்தநிலையில் 16.09.2026-ம் தேதி அலிஹர்மான், அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் முறைப்படி பெண் கேட்டார். அதற்கு பெண் வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அலி ஹர்மான், அவசர தேவை எனக்கூறி 50,000 ரூபாயை அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். உடனே அந்தப் பெண்ணும் அலிஹர்மானுக்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். இதையடுத்து 19.09.2026-ம் தேதி திருமணத்துக்கு நகைகள் வாங்க வேண்டும். அதனால் உன்னிடம் உள்ள பழைய தங்க நகைகளைக் கொடு என்று அலிஹர்மான் அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதனால், கம்மல், மோதிரம், செயின் என மொத்தம் சுமார் 1¼ சவரன் தங்கநகைகளை அந்தப் பெண் அலிஹர்மானிடம் கொடுத்திருக்கிறார். பணம், தங்க நகைகளை வாங்கிய பிறகு அலிஹர்மான் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். அதனால் அந்தப் பெண் அலி ஹர்மானுக்கு பல தடவை போன் செய்தும் அவரிடம் பேச முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்தார். இதையடுத்து அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் அந்தப் பெண் புகார் அளித்தார். அலி ஹர்மானுக்கு பணம் அனுப்பி ஆதாரத்தையும் போலீஸாரிடம் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அலிஹர்மானைத் தேடி வந்தனர். கைது பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது தங்க நகைகள், பணம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டார். அந்தப் பணத்தில் விலை உயர்ந்த செல்போன் வாங்கியதையும் அலி ஹர்மான் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அலிஹர்மான், Medical Representative-யாக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து அயனாவரம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட அலி ஹர்மான் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவரின் பின்னணியை விசாரித்து வருகிறோம்'' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/youth-arrested-in-marriage-cheating-case-in-chennai




