சென்னை, மாநில நெடுஞ்சாலைப் பலகையிலேயே இந்தி எதற்காக? தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. மும்மொழிகளில் வழிகாட்டிப் பலகை இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் அமைக்கப்பட்டுள்ள SH-93 மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் துறையிலேயே இந்தி திணிக்கப்படுவதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளக்கம் அளிக்க வேண்டும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தப் பலகையில் இந்தி இடம்பெற்றதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு என்ன? எந்த விதிமுறையின் அடிப்படையில் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது? யாருடைய ஒப்புதலின் பேரில் இந்தி நுழைக்கப்பட்டது? என்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். ஒருபுறம், தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், மறுபுறம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நெடுஞ்சாலைத் துறையே வழிகாட்டிப் பலகையில் இந்திக்கு இடமளித்திருப்பது வேலியே பயிரை மேய்வது போன்ற செயலாகும். நிர்வாகப் பிழையா? இது அப்பட்டமான இரட்டை வேடம் மட்டுமல்லாமல், கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த நிர்வாகப் பிழையா? அல்லது அரசுத் துறைகளின் வழிகாட்டிப் பலகைகளில் குறுக்கு வழியில் புதிய மொழி நடைமுறை ஏதேனும் புகுத்தப்படுகிறதா? என்பதை அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா காலந்தொட்டுத் தமிழ்நாடு சமரசமின்றிப் பின்பற்றி வரும் 'இருமொழிக் கொள்கை'யில் தற்போதைய அரசு ஏதேனும் சமரசம் செய்து கொண்டுள்ளதா? தற்போதுள்ள ஆட்சியில் இந்தித் திணிப்புக்கு மறைமுகமாக கதவு திறந்து விடப்படுகிறதா? என்பதைத் தமிழ்நாடு அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துகளை உடனடியாக நீக்கி, தமிழ்நாட்டின் மொழி உரிமையையும் இருமொழிக் கொள்கையையும் நிலைநாட்ட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-hindi-on-the-state-highway-signboard-velmurugan-questions




