சென்னை, தாம்பரம் ரெயில் நிலையத்தில் 'லிப்ட்' பழுதானதால் ரூ.500 கொடுத்து டிராலியில் மூதாட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய வந்த மூதாட்டி ஒருவர், நடைமேடைக்கு செல்ல 'லிப்ட்' வசதி இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளானார். பின்னர் வேறு வழியின்றி ரூ.500 கொடுத்து டிராலியில் சென்றார். 'லிப்ட்' பழுது இதுகுறித்து அவரது மகளான சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா கூறியதாவது:- என் தாயார் சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாது. தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க, சக்கர நாற்காலி, மின்சார வாகனம், லிப்ட் போன்ற வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்த்து அழைத்து வந்தோம். ஆனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதடைந்து இருந்தது. அதிகாரிகள் அலட்சியம் இதனால் 10-வது நடைமேடைக்கு எனது தாயை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அங்கிருந்த பணியாளரை நாடினோம். அவர் உடைமைகளை ஏற்றிச்செல்லும் டிராலியில் எனது தாயை அமர வைத்து நடைமேடைக்கு அழைத்துச் செல்ல ரூ.500 கேட்டார். பின்னர் வேறு வழியின்றி ரூ.500 கொடுத்து எனது தாயை டிராலியில் வைத்து அழைத்து சென்றோம். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்த போது, 'லிப்ட்' சரிசெய்ய இன்னும் 2 மாதங்கள் ஆகும் என அலட்சியமாக பதிலளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். கோரிக்கை சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "தாம்பரம் நிலையத்தில் 'லிப்ட்', எஸ்கலேட்டர் வசதிகளை ஏற்படுத்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். புதிய மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்காக பேட்டரி கார், மோட்டார் சக்கர நாற்காலி வசதிகளை உடனடியாக ஏற்படுத்தவேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-pays-rs-500-trolley-tambaram-station-broken-lift



