சென்னை, தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை மயிலாப்பூர் மற்றும் திருச்சி தில்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணாநகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டெண்டர் ஒதுகீட்டில் முறைகேடு கே.என்.நேரு திமுக ஆட்சியில் நகராட்சி, நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த டெண்டர் ஒதுகீட்டில்தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிஏயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணிக்கு சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கே.என்.நேருவிற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். 241 ஆவணங்கள் பறிமுதல் இந்தநிலையில், கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/30-locations-raided-241-documents-seized-anti-corruption-department




