சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்:- இது குறித்து, நயினார் நாகேந்திரன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- வெண்கல பதக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன், 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்து சாதனை படைத்துள்ள தமிழகத்தின் திறமையான தடகள வீராங்கனையும், பெண்களின் ஆற்றலுக்கும் தன்னம்பிக்கைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவருமான வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய சாதனை 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 55.42 வினாடிகளில் இந்தியாவின் முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி. உஷா அவர்கள் படைத்திருந்த தேசிய சாதனையை முறியடித்து, புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள வித்யா ராம்ராஜின் இந்த மகத்தான வெற்றி, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவரது சாதனை, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது. வாழ்த்து தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற உறுதியின் அடையாளமாகத் திகழும் வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவர் தொடர்ந்து பல உயரங்களை எட்டி, எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமளித்து, சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைத் தேடித் தர வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/breaking-a-42-year-old-national-record-nainar-nagendran-congratulates-vidya-ramraj




