சென்னை, சமூகநீதி குறித்து எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! என சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு சனவரி 8 அன்று 103வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. அடுத்த நாள் சனவரி 9 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. சனவரி 12 இந்த சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இதனை எதிர்த்து எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு (W.P.(C) No. 182/2019) தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாட்டிலேயே மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞரான வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர் குழு EWS சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான 70 பக்க Affidavit தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்பித்தும், நேரில் வாதாடவும் செய்தார். எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் வழக்கில் 2022 நவ. 11 அன்று பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது. ஓபிசி இடஒதுக்கீடு மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாட்டிலேயே முதல் கட்சியாக எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் 27.06.2019 அன்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார். அதற்கு பின்னர் தான் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து சட்டப் போராட்டம் நடத்தியது. ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில், 10.07.2020 அன்று கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இணையவழியில் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவிட் உச்சம் தொட்ட நிலையிலும் 16.10.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பங்கேற்றார். 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஓபிசி பிரிவினருக்கு மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது. இது சமூகநீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரகடனப்படுத்தினார். அப்போதும் கூடவே முன்னேறிய சாதியினருக்கு தரப்படும் EWS 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை 30.07.2021 அன்று விரிவான கண்டன அறிக்கை மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-qualified-to-take-lessons-from-thirumavalavan-on-social-justice-vanni-arasu



