திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் செப்டம்பர் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளன. இதுவரை 409 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13-ந்தேதி மலையாள மாதமான 'சிங்கம்' மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருமணங்களுக்கு அது மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். திருமண நிகழ்வுகளுக்கு முந்தைய நாள் வரை முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யவும், திருமண நிகழ்வுகளை சுமூகமாக நடத்தவும் காவல்துறையுடன் இணைந்து கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயில் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கோவில் நகரப் பகுதி முழுவதிலும் கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருமணங்கள் குறித்த நேரத்தில் நிறைவடைவதை உறுதிசெய்ய, அதிகாலை 4 மணி முதலே திருமண நிகழ்வுகள் தொடங்கப்படும் எனவும், திருமண சடங்குகளை நடத்த கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/kerala-over-400-weddings-booked-at-the-guruvayur-krishna-temple-for-the-13th




