அயோத்தி, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு வழங்கிய விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பெருமளவில் திருடப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த முறைகேடு தொடர்பாக காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம்சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு என்கிற ராம்சங்கர் யாதவ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு வழங்கிய முதற்கட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் நடந்தன. கைதான 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மெகா திருட்டு இதற்கிடையே புலனாய்வுக்குழு வழங்கிய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக அவினாஷ் சுக்லா (வயது 30) அடையாளம் காணப்பட்டு உள்ளார். விசாரணை அறிக்கையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள இவர், 40 நாட்களில் 70 முறை ராமர் கோவில் காணிக்கையை திருடி உள்ளார். அதாவது காணிக்கை எண்ணும் பணியின்போது, பெரிய மதிப்பு கொண்ட பணக்கட்டுகளையும், சில்லறை ரூபாய் நோட்டுகளையும் திருடி மறைப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அவினாஷ் சுக்லாவுக்கு பெரும் பங்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. வீட்டில் கியூ.ஆர். கோடு காணிக்கை பெட்டி மேலும் அவரது வீட்டில் இருந்து அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டதும் இதை உறுதி செய்திருக்கிறது. அந்தவகையில் ரூ.20.39 லட்சம் பணம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. காணிக்கை எண்ணும் பணிக்காக ரூ.15 ஆயிரம் மட்டுமே அவினாஷ் சுக்லா சம்பளமாக பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத்தவிர 'ராமராஜ்ய நிதி' என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, அதில் கியூ.ஆர் குறியீடு ஒட்டப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அறக்கட்டளை ஆலோசனை திருடப்பட்ட காணிக்கை பணத்தை மறைப்பதிலும், அகற்றுவதிலும் சுக்லாவுக்கு பிற பணியாளர்கள் உதவியதும் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் மொத்தம் 6 பேர் நேரடியாக இந்த கையாடலில் ஈடுபடுவதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் உறுதி செய்திருக்கின்றன. இதுதொடர்பான விசாரணை மேலும் தீவிரமாக நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/massive-theft-of-ram-temple-donations-shocking-details-revealed-in-investigative-committees-report




