முழு கட்டுரை
“டெண்டர் நடைமுறை” 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான விவாதம், மேட்டூர் அணைக்காக தேவையான இயந்திரங்களை வாங்கும் “டெண்டர் நடைமுறை” குறித்ததாகும். இந்த விவாதத்தில் சி.வி. வெங்கடரமண அய்யங்கார் பல கேள்விகளை எழுப்பினார். அனைத்துக்கும் சி.பி.ஆர் பதிலளித்தார். அதன் சுருக்கம்.. முதன்மையாக, அரசாங்கம், சிறப்பு அதிகாரி ராபர்ட்ஸ் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி, அங்கு கான்கிரீட் கலவையிடும் இயந்திரங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளச் செய்தது. அவர் தனது இறுதி அறிக்கையை தலைமைப் பொறியாளரிடம் சமர்ப்பித்திருந்தாலும், அரசு விவாதம் நடைபெறும் நாள் வரை சட்டமன்றத்தில் பெறப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன், நிறுவனங்களின் பெயர்கள் போன்ற சில தகவல்களைத் தவிர்த்து, சபையின் ஆர்வத்தை கருதி பெரும்பாலான விபரங்கள் வெளிப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. கான்கிரீட் கோபுர கட்டமமைப்பு இந்த அதிகாரி முதலில் அனைத்து வகை இயந்திரங்களையும் ஆய்வு செய்யும்படி பணியமர்த்தப்பட்டிருந்தார். ஆனால் இறுதியில் அவர் தனது கவனத்தை “கான்கிரீட் இயந்திரங்கள்” (CONCRETE TOWER) மீது மட்டுமே செலுத்த வேண்டும் என்ற அரசின் முடிவு எடுக்கப்பட்டது. அதனால்தான் அவர் முக்கியமாக கான்கிரீட் இயந்திரங்களைப் பற்றி ஆய்வு செய்து, தேவைக்கேற்ற இரண்டு நிறுவனங்களிடமிருந்து தற்காலிக டெண்டர்களைப் பெற்றார். இந்த நிறுவனங்களில் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனம் என்பதும், மற்றொன்று ஜெர்மன் அல்லது அமெரிக்க நிறுவனம் ஆக இருக்கக்கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டது. கான்கிரீட் இயந்திரம் நாம் சென்ற அத்தியாயங்களில் கண்ட கான்கிரீட் இயந்திரத்தின் விலை பற்றி விவாதிக்கப்பட்டபோது, அது சுமார் ரூ. 45 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை இருக்கும் என அரசு தெரிவித்தது. சரக்கு மற்றும் சுங்கம் சேர்த்தும் இந்த விலை அந்நாளைய திட்ட அசல் மதிப்பீட்டான ரூ. 60.13 லட்சத்தை விடக் குறைவானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. கான்கிரீட் கலவையிடும் இந்த இயந்திரம் மிகப்பெரிய அமைப்பாகும். இதில் கோபுரம், கொள்கலன் மற்றும் கலவை வெளியேற்றும் கருவிகள் அடங்கும். அணை பணிகள் முடிந்தபின், இது போன்ற பிற பாசனத் திட்டங்களில் அல்லது அணை கட்டுமானங்களில் மறு பயன்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும் என அரசு கூறியது. மேலும், அணை கட்டுவதற்கு சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கற்களை பயன்படுத்தலாமா அல்லது சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தலாமா, என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதற்கான இறுதி முடிவை அரசு இன்னும் எடுக்கவில்லை எனவும், ஆனால் சமீபத்திய உலகின் பல அணைகளில் சிமெண்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது. சிமெண்ட் பயன்படுத்தப்பட்டால் இந்த இயந்திரம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் மாற்று கருவிகள் பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என தெளிவுபடுத்தப் பட்டது. இத்துடன் தொடர்புடைய மற்ற இயந்திரங்கள் — குவாரி கிரஷர்கள், மின் உபகரணங்கள் போன்றவற்றிற்கான டெண்டர்கள் “இந்தியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “ஹை கமிஷனர்” வழியாக பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கனரக இயந்திரங்கள் போக்குவரத்திற்காக “ஈரோடு – மேட்டூர் சாலை” முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. பழுது பார்க்க, சுமார் ரூ. 6 லட்சம் செலவில், மூன்று வளைவுகள் கொண்ட பாலம் மற்றும் ஏராளமான மதகுகள் (culverts) உடன் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கிடையில், “மேட்டூர்–சேலம் ரயில்பாதை அமைக்கும் திட்டம்” குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வழங்கப்பட்டது. மேட்டூர் அணைக்கான டெண்டர் நடைமுறையில் வழக்கமான போட்டி முறையை முழுமையாக பின்பற்ற இயலாத சூழ்நிலையில், நிபுணர்கள் பரிசீலனை செய்து சரியான வடிவமைப்பு கொண்ட இயந்திரத்தைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் முடிவு செய்தது. கான்கிரீட் கோபுர கட்டமைப்பு இத்தகைய பெரிய செலவினம் கொண்ட திட்டம் குறித்த சபையின் அக்கறையும், அரசு காட்டிய தெளிவும், திட்டத்தின் நடைமுறைப் பக்கம் எவ்வளவு சிக்கலானதாக இருந்தது என்பதை இந்த விவாதம் வெளிப்படுத்துகிறது. இந்த விவாதத்தில் பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட்ஸ் அவர்களை இங்கிலாந்து அனுப்பிய விஷயத்தில் அவரை சந்தேகக் கண்ணோடு பார்த்து அது குறித்து பல கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பியதாக நன்கு புலப்படுகிறது. இதற்கு காரணம் ராபர்ட்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆரம்ப காலங்களில் இந்திய அரசு (பிரிட்டிஷ் அரசு) தெரிவு செய்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார் என்பதுவும் ஒன்று. ஆனால், அரசின் நம்பிக்கை பெற்றவராக ராபர்ட்ஸ் இருந்துள்ளார். அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிந்த பிறகு, பிரிட்டிஷ் அரசு மேட்டூரில் அமைத்த “நினைவு அரங்கத்தில்” அனைத்து முக்கிய பொறியாளர்களது வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் நம்மால் காண முடியும். சுண்ணாம்பு Vs. சிமெண்ட் – விவாதம் மேட்டூர் அணையைக் கட்ட சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவதா அல்லது சிமெண்ட் பயன்படுத்துவதா? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது! இதுகுறித்து பலத்த விவாதம் அவையில் நடைபெற்றது. காலத்துக்கேற்ப மாற்றம் தேவை என்று பொறியாளர்கள் முன்மொழிந்தனர். அரசாங்கம் அவர்களின் பார்வைக்கு இசைந்தது. ஆனால், மரபுக்கு மாறாக இது புதுமையாக உள்ளது என உறுப்பினர்களிடையே பலத்த சந்தேகம் எழுப்ப காரணமாக அமைந்தது. எனவே, இது குறித்த விவாதம் சட்ட சபையில் அனல் தெறித்தது எனலாம். விவாதத்தின் சாரம் ஆரம்ப திட்ட மதிப்பீடு சுண்ணாம்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உலகின் பெரிய அணைகளில் (1916-க்குப் பிறகு) சுண்ணாம்புக்கு பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டதால், தலைமைப் பொறியாளர் (திரு. முல்லிங்ஸ்) சிமெண்ட்டுக்கு ஆதரவாக பரிந்துரை செய்தார். சிமெண்ட் விலை அதிகமாக இருந்தாலும், அது நீடித்தும், வலிமையுமாக இருக்கும் என்பதால் கூடுதல் செலவு நியாயமாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சிமெண்ட் தரத்தில் குறைவில்லை, வெளிநாட்டு இறக்குமதியுடன் ஒப்பிடும்படியே உள்ளது என்ற கருத்து நிலவியது. சட்டமன்றத்தில் எழுந்த சந்தேகங்கள்: “ஏன் மரபான சுண்ணாம்பு முறையை விட்டு விலக வேண்டும்?” “வடஇந்தியாவிலும், இந்தியாவின் பழைய அணைகளிலும் எல்லாம் சுண்ணாம்பே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏன் மாற வேண்டும்?” “சிமெண்ட் பயன்படுத்தினால் செலவு எவ்வளவு அதிகரிக்கும்?” “மணல், சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகிய பொருட்கள் அருகிலேயே கிடைப்பதால் செலவு குறையுமா?” “இந்திய பொறியாளர்களிடம் (உதாரணம்: சர் விஸ்வேஸ்வரய்யா) ஆலோசனை பெற்றீர்களா?” “தலைமைப் பொறியாளருக்கு பெரிய அணைகள் கட்டிய அனுபவம் எவ்வளவு?” இவ்வாறான கேள்விகள் பல உறுப்பினர்களிடமிருந்து கேட்கப்பட்டது. இது குறித்து அரசின் சார்பாக சர்.சி.பி.ராமசாமி அய்யர் பதிலளித்தார்: “அரசு இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை, ஆனால் பொறியாளர்களின் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறது. உலகின் புதிய அணைகள் பெரும்பாலும் சிமெண்டால் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டப்பட்டு வருகின்றன. சுண்ணாம்பு முறையால் தேவையான வலிமை கிடைக்காது, அதனால் சிமெண்ட் அதிகம் பொருத்தமாக இருக்கும். இந்திய சிமெண்ட் உற்பத்தி போதுமானதாகவே உள்ளது, அதைத் தான் பயன்படுத்துவோம்” என்றும் உறுதிபட கூறினார். 1916-ம் ஆண்டுக்குப் பிறகு உலகில் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் குறிப்பாக தென் அமெரிக்கா, எகிப்து, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிமெண்ட்தான் சிறந்தது என்று அதை பயன்படுத்துகிறார்கள். சிமெண்ட் வைத்து அணை கட்டுவதே இப்போது நடைமுறையாக உள்ளது. மேட்டூருக்கு அருகில் மணல், சுண்ணாம்பு போன்ற கட்டுமான பொருட்கள் கிடைத்தாலும், விலை சற்று கூடுதலாக ஆனாலும், சிமெண்ட் பயன்படுத்துவது சாலச்சிறந்தது என்ற முடிவுக்குச் செல்வதாகவே அரசின் பதில் இருந்தது. சுண்ணாம்பு கலவைக்கு பதிலாக சிமெண்ட் பயன்படுத்துவது என்ற கொள்கை முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற காரசாரமான விவாதத்தை எதிர்கொண்டது மெட்ராஸ் மாகாண சட்டக் கவுன்சில். கான்கிரீட் கோபுர கட்டமைப்பு இந்த சமயத்தில் அரசு சிமெண்ட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்ற முடிவை ஏறக்குறைய எடுத்து விட்டது. மேற்கண்டவாறு எதிர்ப்புகள் எழுப்பப்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து தொடர்ந்து சிமெண்ட் மட்டுமே மேட்டூர் அணை கட்டப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் (2026) சுண்ணாம்பு முழுவதுமாக வழக்கொழிந்து போய்விட்டது, நாம் அறிந்ததே! ஆனால், 100 வருடங்கள் முன்பு புதிய முன்னேற்றமாக சிமெண்ட் வந்தபோது எதிர்ப்பு இருந்துள்ளது குறித்து பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை! இந்த விவாதம் மிக விரிவான அளவில் நடந்துள்ளது. இங்கே மிகவும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அரசு சார்பில் திறமையாக பதிலளித்து அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்தார், “லா மெம்பர்” சர் சி.பி. ராமசாமி அய்யர். அவைத் தலைவரின் விநோத அறிவிப்பு 1927-ம் வருடம் மார்ச் 22-ம் தேதி, அவைத் தலைவர் ஒரு அறிவிப்பு செய்தார். “திரு. C. V. வெங்கடரமண அய்யங்கார் என்ற உறுப்பினர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எட்டு கேள்விகளுக்கு குறையாமல் மேட்டூர் திட்டம் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார். ஆனால், இன்று திருவாளர்கள் எத்திராஜ் நாயுடு மற்றும் ராமச்சந்திர ரெட்டி அவர்கள் இருவரின் கேள்விகளை எடுத்துக் கொள்ளுமாறு செயலரை கேட்டுக்கொள்கிறேன்" என்று அவைத்தலைவர் கூற திரு. C. V. வெங்கடரமண அய்யங்கார், ``நான் ஏற்கனவே இந்த விஷயம் குறித்து நோட்டீஸ் வழங்கி இருக்கிறேன், இன்னும் பதில் தயாராகவில்லை போலும்..." என்று சிரித்தபடியே அமர்ந்திருந்தார். இந்த அறிவிப்பின் மூலம் எந்த அளவுக்கு திரு சி.வி. வெங்கட்ரமண அய்யங்கார், அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கு சிம்ம சொப்பனமாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்திருக்கிறார் என்பதை நன்கு உணர முடியும்! மேட்டூர் அணை திட்ட மதிப்பீடு & தள மாற்ற விவாதம்: 1910-ல் தலைமைப் பணிகளுக்கான மதிப்பீடு ரூ.192 லட்சம்; 1924 இல் அது ரூ.339 லட்சமாக உயர்ந்தது. கால்வாய் அமைப்பு 1910-ல் ரூ.115 லட்சம்; 1924-ல் ரூ.193 லட்சமாக உயர்ந்தது. மதிப்பீடு உயர்வுக்கான காரணம், தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் பொருட்களின் விலை இரட்டிப்பு. இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. பாசனப் பரப்பு எதுவும் மாறவில்லை என்றும் மதிப்பீடு உயர்வுக்கான காரணம் ஆட்களின் சம்பளம் மற்றும் பொருட்களின் விலை அதிகம் என்று பதிலளிக்கப்பட்டது. அணையின் தள மாற்றம் (Head Works – Site Shift) மதிப்பீடு அதிகரிக்க ஒரு காரணம். அணை முதலில் திட்டமிட்ட இடத்திலிருந்து வடக்கே 1 மைல் மாற்றப்பட்டது. இதனால் மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.27 லட்சம் அதிகரித்தது. காரணம்: மைசூர் ஒப்பந்தத்தால் கூடுதலாக 13,000 மில்லியன் கனஅடி நீர் சேமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அதற்காக உயரமான, ஆழமான அடித்தளம் கொண்ட அணை தேவைப்பட்டது. 15% க்கும் மேல் அதிகரித்தால் மட்டுமே இந்திய அரசின் அனுமதி தேவைப்படும்; எனவே சட்ட ரீதியாக பிரச்னையில்லை என்றும் புதிய தளம் இந்திய அரசின் புவியியல் நிபுணர்களால் சிறந்ததாக கருதப்பட்டது எனவும் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்டதற்கு பதில் தரப்பட்டது. கான்கிரீட் கோபுர கட்டமைப்பு விவாதம் தொடர்ந்தது: “புதிய தளத்தில் துளையிடுதல் நடக்கிறதா? → ஆம், 30–40 அடி வரை. “பழைய தளம் சிறந்ததா, புதிய தளமா? → : புதிய தளம் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தினர் என்றவாறு விவாதம் இருந்தது. C.V. வெங்கடரமண அய்யங்கார், 1910 அறிக்கையில் Site-D சிறந்தது என கூறப்பட்டுள்ளது; இப்போது Site-A பாதுகாப்பு குறைவானது என குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு கேள்வி எழுப்பினார். தற்போதைய தளம் Site-Y; இது புதிய ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டது. முன்பிருந்த Site-D அல்ல. பழைய குறியீடுகள் (A, B, C, D) பின்னர் மாற்றப்பட்டன என்று சி.பி.ஆர்., விளக்கமளித்து சி.வி.வி மற்றும் பிற உறுப்பினர்கள் அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். (குறிப்பு : இந்த சமயத்தில் “அணை ஓசை” தொடரின் முற்பகுதியில் “அணையின் இடத்தேர்வு மற்றும் இட மாற்றம்” குறித்த விவரங்கள் அடங்கிய அத்தியாயத்தை நினைவு கூற வாசகர்களைக் கோருகிறேன். சைட்-D-ல் (SITE-D) அடித்தளமிட, துளைகளிட்டு சோதித்துக் கொண்டிருக்கும் போது, புவியியல் நிபுணர்களின் அறிக்கைகளின்படி சைட்-Y க்கு (SITE-Y) இடமாற்றம் செய்ததின் காரணங்களை விரிவாக அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.) திரு வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர்:சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர்கள் மெட்ராஸ் மாகாண கவுன்சில் கூட்டங்களில் பல விவாதங்களில் பங்கேற்று திறம்பட பங்களித்த மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய குறிப்புகளை இப்போது காண்போம்! திரு வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர்: 1921 முதல் 1926 வரை சென்னை மாகாண சட்ட சபையில் பங்கெடுத்த விபரங்கள், தான் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து ஒரு குறிப்புப் புத்தகம் எழுதியுள்ளார் வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர். அதில் செலவை குறைப்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும், அரசு நிறுவனங்கள் அனைத்திலும் சிக்கனக் கொள்கையை கடைப்பிடிப்பது என்ற உறுதி தமக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். V.C. வெள்ளிங்கிரி கவுண்டர் விவசாயத் துறையைச் சேர்ந்த இவருக்கு அதிகார வர்க்கத்தினருடன் பழக வாய்ப்பு கிட்டியதால் தனது அனுபவங்களை, எண்ணங்களை தனது குறிப்பு நூலில் பகிர்ந்துள்ளார். “விவசாய இலாகா நிறைய பணம் செலவு செய்கிறது. ஆனால், அரசு அலுவலர்கள் குடியானவர்களுடன் எந்த ஒரு நல்ல தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. விவசாய கல்லூரிகளை நிறைய செலவில் ஏற்படுத்தி இருக்கிறோம். இதனால் குடியானவர்களுக்கு யாதொரு பலனும் இல்லை” என்று குறிப்பில் எழுதி இருக்கிறார். “இந்த விவசாய இலாகா குருவி தலையில் பனங்காய் வைத்தது போல வீண் செலவு தான் செய்கிறது” என்பது இவரது கருத்து! “கட்டடங்களை பெரிதுபடுத்தி கட்டிக் கொண்டு போவது எந்த விவசாய பிரச்னைகளையும் தீர்த்து வைக்காது. செலவு தான் அதிகரிக்கும். ஜனங்களுக்கு உண்மையான பயனளிக்கும்படி விவசாய இலாகாவை மாற்ற வேண்டும். தயவு தாட்சினைகள் இல்லாமல் அனாவசிய செலவுகளை குறைத்து விட வேண்டும். இது சாத்தியம் தான்” என்று நம்பிக்கையோடு பதிவு செய்துள்ளார். அரசு பணத்தை விவசாயிகளின் நன்மைக்கு அதாவது கால்நடைகள் மேய்வதற்கு வசதியாக, பெரிய கடன்கள், சிறிய கடன்கள், கிராமச்சாலை வசதிகள், மகசூல் விற்பனை வசதிகள், விவசாய கருவிகள் வாங்க உதவி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளார் வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர். கான்கிரீட் கோபுர கட்டமைப்பு அதிகாரிகள் ஆபீஸ் கடிதங்களுக்கு குறிப்புகள் எழுதுவதற்கு பதில் ஓரிடத்தில் அமராமல் கிராமங்கள் தோறும் சுற்றுப் பிரயாணம் செய்து நேர்முக வேலைகளைச் செய்தால் நாட்டின் நிலைமைகள் மிகவும் முன்னேற்றமடையும் என்பது இவரது கருத்து. எல்லா வழிகளிலும் சிக்கனத்தை கடைபிடிப்பது தலையாய கடமையாகும் என்றார் இந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டக் கவுன்சில் உறுப்பினர் திரு வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர். சென்னை மாகாண சட்டமன்றத்தில் காவிரி மேட்டூர் திட்ட விவாதங்கள் பலவற்றிலும் தவறாமல் கலந்து கொண்டு பல்வேறு வாதங்களையும் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். நீண்ட நீண்ட விவாதங்களுக்கு சொந்தக்காரர். இவர் பல்வேறு கேள்விகளை கொடுத்து அரசு தரப்பு அதிகார அமைச்சர்கள் மற்றும் கவுன்சில் செயற் குழு உறுப்பினர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கியுள்ளார். மெட்ராஸ் மாகாண சட்ட கவுன்சிலில் திரு சி.வி.வெங்கட்ரமண அய்யங்கார் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 7.11.1925- ல் கொண்டு வந்த தீர்மானம் அது. மேட்டூர் அணை திட்ட விஷயமாக “சட்ட மெம்பர்” (LAW MEMBER) அவர்களை சந்தித்த குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். கான்கிரீட் கோபுர கட்டமைப்பு “மேட்டூர் அணைக்காக நிலங்களை, அரசு விலைக்கு வாங்கும் விஷயத்தில் நஷ்ட ஈட்டுத் தொகையை உடனே பூமி தாரர்களுக்கு செலுத்தி விடலாம். ஆனால், அவர்களை அப்புறப்படுத்துவதில் அவசரம் காட்டுதல் வேண்டாம். வேலை துரிதமாக நடக்கும்போது அப்புறப்படுத்தினால் போதும். இந்த மேட்டூர் திட்டத்தில் தஞ்சாவூருக்கு தான் அதிக அனுகூலம் கிடைக்கும். எனவே, அவசரப்பட்டு நிலங்களை விட்டு வெளியேற மேட்டூர் விவசாயிகளுக்கு அழுத்தம் தர வேண்டியதில்லை. வாய்க்கால்களில் தண்ணீர் இன்னும் எட்டு அல்லது பத்து வருடங்களுக்குப் பின்னரே வரப் போகிறது. செலவாகிற பணத்தின் வட்டியை மீதப்படுத்திக் கொள்ளலாம். உடனே பணம் தர வேண்டும் என்றால், மேட்டூர் குடிகளுக்கு முந்தியே கொடுத்து விடுவது நியாயம். மேலும் நஷ்ட ஈடாக பதில் நிலங்களை கொடுக்கும் விஷயத்தில் பண இலாக்காவிலிருந்து எடுத்துக் கொடுப்பதை விரைவு படுத்த வேண்டும். குடியானவன் தனது ஊரை விட்டு வெகு தூரத்துக்கு அப்பால் ஓடும்படி செய்யாமல் மக்களின் அருகாமையில் பதில் பூமிகள் தரப்பட வேண்டும்” என்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். மதுக்கடைகளை அரசு திறக்க கூடாது எனவும் மதுவால் ஜனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் எனவும் மிகத் தீர்க்கமானதொரு உரையை சட்டமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார், இவர். பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1925 லேயே உரக்க குரல் எழுப்பி இருக்கிறார் திரு வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர். 100 வருடங்கள் கடந்து விட்டது. மதுப்பழக்கம் மக்களிடையே இன்னமும் அதிகமாகி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் கேடாக, தீராத பிரச்னையாக இப்போது உருவெடுத்துள்ளது காலக்கொடுமையே! அரசின் கலால் கொள்கையே இதற்கு காரணம் என்று 100 வருடங்களுக்கு முன்பே கடுமையாக சாடி இருக்கிறார் இந்த சட்டமன்ற உறுப்பினர். “குடிப்பதற்கு தான் வசதி கேட்கப்படுகிறது. கிராமங்களில் கால்நடைகளுக்கும், நாத்துகளுக்கும், கால்நடைகளை கழுவுவதற்கும், துணிகளை துவைப்பதற்கும் இன்னும் இதர காரியங்களுக்கும் தண்ணீர் தேவையாக இருக்கின்றது. கால்நடைகளுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. சில இடங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பது வெகு சிரமமாகப் போய்விடுகிறது. எனவே சமூக காரியங்களுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்”. “சகல காரியங்களுக்கும் கிராமத்தார்கள் வாய்க்கால்களையும் அவைகள் சம்பந்தப்பட்ட குளங்களையும் நம்பித்தான் இருக்கிறார்கள். இந்த பயன்பாட்டில் நாம் நுழையக்கூடாது. மைனர் (சிறிய) நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும். அவையே தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்”. “மேட்டூர் போன்ற மலை போல பணத்தை தின்னும் திட்டங்களை நான் ஆதரிப்பதில்லை. ஏராளமான பணம் செலவழித்த பிறகும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் திருப்தியாக இல்லை. திருப்திக்கும் அதற்கும் வெகு தூரம். பல கால்நடைகள் மிகுந்த கஷ்டப்படுகிறது” என்று அணை கட்டி முடித்தபிறகு பின்னாளில் ஒரு விவாதத்தில் உரையாற்றியுள்ளார் திரு வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர். மாறுபட்ட கோணத்தில் இவரது உரைகள் அமைந்திருந்தாலும், அரசை சிந்திக்க வைத்தார் இந்த கோயம்புத்தூர் மாவட்ட பிரதிநிதி. மேல் பவானி திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் கோயம்புத்தூர் ஜில்லா அதிக மேம்பாடு அடைந்திருக்கும் என்றும் பலமுறை சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார். தமிழ்நாடு இவருக்கு பெரும் கடமைப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்விகே. ஏ. நாச்சியப்பகவுண்டர் கொங்கு வேளாள சமூகத்தைச் சார்ந்தவர். 1936 முதல் 1946 வரை சேலம் மாவட்ட வாரியத்தின் தலைவராக இருந்தார். 1932 முதல் 1946-ம் ஆண்டு வரை மெட்ராஸ் மாகாண சட்டக்கவுன்சில் உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவர் சட்டசபையில் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார். 1951-ம் ஆண்டு இவர் மறைந்தார். காவிரி-மேட்டூர் திட்ட விவாதங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஆக்கப்பூர்வ கருத்துக்களை மேட்டூர் அணைத்திட்ட விவாதங்களில் கலந்து கொண்டு பங்காற்றியவர். திவான் பகதூர் எல்லப்ப செட்டியார் (1883-1953) கன்னட தேவாங்க சமூகத்தைச் சார்ந்த கல்வியாளர். சேலம் குகை பகுதியில் பொது சமூகஊழியர். பல கல்வி நிறுவனங்களை சேலம் மாவட்டத்தில் நிறுவி அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். “ஜஸ்டிஸ் கட்சி” எனும் நீதிக் கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்தவர். பிராமணர் அல்லாத சமூகத்தினரின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பில் தீவிர அக்கறை காட்டினார். திரு. எல்லப்பா அவர்களின் பொதுச் சேவைகளை பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் 1921-ல் ராவ் சாஹிப் பட்டம், 1927-ல் ராவ் பகதூர் பட்டமும், 1931-ல் திவான் பகதூர் பட்டமும் அளித்தது. சேலம் எல்லப்பா செட்டியார் மாண்புமிகு மேஜிஸ்ட்ரேட் பதவி, சேலம் முனிசிபல் கவுன்சில் மெம்பர், சேலம் தாலுக்கா போர்டு தலைவர், சேலம் மாவட்ட வாரியத்தின் உதவி தலைவர், 1920 லிருந்து மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார். மெட்ராஸ் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் 1923-1925 வரையிலும் பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஓய்வு பெற்ற பின் குடும்ப லௌகீக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசியானார். பிரம்மானந்த சுவாமி என்ற பெயரில் “சங்கர ஆசிரமம்” என்று ஒன்றை நிறுவினார். அதன் மூலம் ஆன்மீக பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அளித்தார். 1932ல் வெள்ளம் & மேல்மட்ட மதகுகள் கட்டுமானம் சேலம் நகரில் குகை என்ற இடத்தில் தனது வாழ்நாளின் இறுதி பகுதியில் பெரும்பாலான நேரம் அங்கேயே பணியாற்றினார். கஞ்சமலை என்ற இடத்தில் சித்தேஸ்வர சுவாமி கோயில் என்ற கோவிலில் பக்தர்களின் வசதிகளுக்கு ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்தார். மேட்டூர் அணையிலிருந்து சேலம் நகருக்கு குடிநீர் வசதி பெறுவதற்காக மெட்ராஸ் மாகாண சட்டசபையில் பலமுறை பல ஆண்டுகளாக சளைக்காமல் தொடர்ந்து முயற்சித்தார். அதேபோல, சேலம் மாவட்ட விவசாய நிலங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர்ப் பாசன வசதி பெற்றுத் தர மிகவும் போராடினார். வெகு காலம் கழித்து சேலம் நகருக்கு குடிதண்ணீர் வசதி கிடைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. காவிரி நன்னீர் சிறப்பு பொருள்: தலைவியின் தோழி தலைவனைப் பார்த்து, எங்கள் ஊருக்கு வராதே, உனது மாலைகளை இங்கு தர வேண்டாம் என்று கூறுவதாக அமைந்துள்ளது. பலரும் நீராடுகின்ற காவிரி நீர்த்துறையில் வளர்ந்த மருத மரத்தில் கட்டபட்ட யானைகளை கொண்டவன் என்று அதன் சிறப்பை கூறுகிறது.“வாரல் எம்சேரி தாரல் நின்தாரே அலர் ஆகின்றால் பெரும/ காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை….” / குறுந்தொகை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்



