சென்னை, தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 - 27ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை, இன்று (05.08.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளுடன் விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2036ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நம்பிக்கை தருகிறது. தமிழ்நாட்டின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது என்றாலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை 55,775 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தாலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தவெக அரசின் நிதி மேலாண்மையை வெளிப்படுத்துகிறது. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி உருவாக்கப்படுவது போன்றவை போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது என்ற இலக்கை அடைய உதவும். இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக ‘அறிவகம்' AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறை கடத்தி சோதனை ஆய்வகம், AI, குவாண்டம் தொழில்நுட்பம் & ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம் போன்ற புதிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும். தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் “விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்” தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தென் மாவட்டங்கள் முன்னேற வழிவகுக்கும். கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொது நலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன், அவற்றை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். சூரிய மின் பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் அளித்தல். ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்குதல். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கையர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்குதல். மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். பெண்களுக்கு திருமணத்தின்போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்' திட்டம். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் மிதிவண்டிகள் வழங்குதல். மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் புதிய சட்டக் கல்லூரி. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு. பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம். ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும். திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் ‘காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் உடற்பயிற்சி கூடங்கள். மண்ணின் மகள் திட்டம். வெற்றி தொழில் முனைவோர் திட்டம். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் - 300 கோடி ஒதுக்கீடு. ஆன்றோர் மேம்பாட்டு திட்டம். ஐந்து மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மையங்கள். இவையெல்லாம் தவெக அரசின் புதிய திட்டங்களாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை தொடரும் நிலையிலும் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, வெற்றித் தமிழகம் என்ற இலக்கை அடைவதை உறுதி செய்து இருப்பதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-financial-status-report-paves-way-for-balanced-growth-vaiko-praise




