விளையாட்டு பொருளாக மாறிய பெராரி கார்! சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தின் 'குன்மிங்' (Kunming) நகரில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமான சிகப்பு நிற 'பெராரி 488 ஜிடிபி' (Ferrari 488 GTB) சூப்பர் கார் வீட்டின் வெளியே பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹5.04 கோடி. கார் உரிமையாளர் பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்றிருந்த சமயம் பார்த்து, பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குஷியில், அந்த பெராரி காரை தங்களின் விளையாட்டு மைதானமாக மாற்றிவிட்டனர். சிசிடிவியில் சிக்கிய சேட்டைகள்! கார் உரிமையாளர் ஊரிலிருந்து திரும்பி, காரின் நிலையைப் பார்த்து அப்படியே உறைந்துபோயுள்ளார். காரின் முன்பக்க ஹுட் (Hood), கூரை, விண்டோஸ், டெயில் லைட்ஸ் என கார் முழுக்க ஒரே கீறல்கள்... பதறியடித்துக் கொண்டு அவர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போதுதான், சிறுவர்கள் செய்த சம்பவங்கள் தெரியவந்தது. சிறுவர்கள் அந்த சொகுசு காரின் கண்ணாடியை 'சறுக்கு மரம்' போல பயன்படுத்தி விளையாடியுள்ளனர். அதுமட்டுமன்றி, கையில் மூங்கில் கம்புகளை வைத்துக்கொண்டு காரின் மேல் தட்டி விளையாடியதும் சிசிடிவி-யில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதனால் காரின் முன்பக்க பம்பரிலும் விரிசல் விழுந்துள்ளது. ரூ.95 லட்சம் பில்... கையை விரித்த பெற்றோர்! இந்தச் சேதங்களைச் சரிசெய்ய எவ்வளவு செலவாகும் எனக் கணக்கிட்டபோது, கார் நிறுவனத்தினர் கொடுத்த பில் தொகையைக் கேட்டு உரிமையாளருக்கே மயக்கமே வந்துவிட்டது. காரை ஒரிஜினல் உதிரிபாகங்கள் கொண்டு சரிசெய்ய சுமார் ₹95 லட்சம் (100,000 யுவான்) செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. உடனே கார் உரிமையாளர் போலீஸாரை அணுகி, சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், பெற்றோர்களோ, "குழந்தைங்க பண்ணிய தப்புக்கு இவ்வளவு தொகையா?" என்று கேட்டதோடு, வெறும் ₹5,000 யுவான் (சுமார் ₹4.75 லட்சம்) மட்டுமே நஷ்டஈடாகத் தர முடியும் எனக் கையை விரித்துள்ளனர். மேலும், தங்களின் பிள்ளைகள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கவும் அவர்கள் முன்வரவில்லை எனத் தெரிகிறது. கோர்ட் படி ஏறிய வழக்கு! பெற்றோர்களின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெராரி கார் உரிமையாளர், தற்போது முழு செலவையும் (₹95 லட்சம்) பெற்றோர்களிடம் இருந்து வசூலித்துக் தரக் கோரி நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 661 குதிரைத்திறன் (hp) கொண்ட அதிரடி Twin-Turbocharged V8 இன்ஜின் வசதி கொண்ட இந்த பெராரி கார், உலகளவில் கார் பிரியர்களின் கனவு வாகனமாகும். சுட்டித்தனமாகச் சிறுவர்கள் செய்த சம்பவம், பெற்றோரை பெரும் சிக்கலில் தள்ளிவிட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/kids-scratch-5-crore-ferrari-owner-sues-parents




