புதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரையே முதல் மூன்று பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகித்தார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். எனினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சில போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஜிம்பாப்வே தொடர் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. மீண்டும் வாய்ப்பு இதுகுறித்து அஜின்கியா ரஹானே கூறுகையில்: “உலகக் கோப்பையில் விளையாடிய அதே முதல் மூன்று பேட்டர்களே மீண்டும் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இரண்டு, மூன்று மோசமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அவருக்கான நேரமும் வரும். ஆனால் தற்போதைக்கு உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே முதல் மூன்று பேட்டிங் வரிசையில் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/these-are-the-indian-teams-top-three-batters-who-are-the-three-players-rahane-named




