சியாட், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்கா-பெல்ஜியம் 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை சியாட்டில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. முதல் பாதி விறுவிறுப்பான இந்த மோதலில் வலுவான இரு அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கின. அப்போது ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சார்லஸ் டி கெடெலேரே முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடியாக 31-வது நிமிடத்தில் அமெரிக்காவின் மாலிக் டில்மேன் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 33-வது நிமிடத்திலேயே சார்லஸ் டி கெடெலேரே 2-வது கோலை அதிவு செய்து அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் அதன்பின் எந்த கோலிம் பதிவாகவில்லை. இதனால் முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. 2-ம் பாதி இதையடுத்து துவங்கிய 2-வது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஹான்ஸ் வானாக்கன் கோல் அடித்து முன்னிலை மேலும் உயர்த்தினார். தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சியில் ஈடுபட ஆட்டம் சூடு பிடித்தது. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதை கோலாக மாற்றமுடியவில்லை. 90 நிமிடங்கள் முடிவில் பெல்ஜியம் 3-1 என முனிலையில் இருந்தது. இதன் பின் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது 90+3 நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோமெலு லுக்காகு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை வெளியேற்றி பெல்ஜியம் கால்இறுதிக்கு தகுதி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-belgium-advances-to-the-quarter-finals-after-defeating-the-usa




