சென்னை, எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு நெருக்கடி இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் ராமன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய Research Expenses மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கான Living Expenses உள்ளிட்ட நிதி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இதனால் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் அவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை தொடங்கியதிலிருந்தே பல்வேறு ஜனநாயக சக்திகளும், சமூகநீதியில் அக்கறை கொண்ட இயக்கங்களும் மாணவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாகவும். தனிப்பட்ட முறையிலும் கோரிக்கைகளை முன்வைத்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். விரைவில் தீர்வு அதன் தொடர்ச்சியாக, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் பா.இரஞ்சித் அவர்கள் சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்களையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர் அவர்களையும் தொடர்புகொண்டு, மாணவரின் நிலைமை குறித்தும், அவரது ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாணவரைத் தொடர்புகொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிதியை அவருக்கு எவ்வாறு வழங்குவது என்பதற்கான நடைமுறையை வகுத்து, அதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர். மாணவர் வீடியோ ஒரு மாணவர் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் பல மாதங்கள் தொடர்ந்து போராடி, பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட பின்னர்தான் ஒரு நடைமுறையை உருவாக்கி தீர்வு காணும் நிலை ஏற்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இத்தகைய பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை அரசு முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையின் இறுதிக்கட்டமாக, தனது கல்வி மற்றும் ஆய்வின் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை எந்த மாணவருக்கும் ஏற்படாத வகையில், அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில், எவ்விதத் தடையுமின்றி மாணவர்களைச் சென்றடைவதற்கான முறையான மற்றும் நிலையான நடைமுறையை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். பாரதிதாசன் ராமனுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்குவதோடு, இனி எந்த மாணவரும் இதற்காக அலைக்கழிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது. ஜெய் பீம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-provide-financial-assistance-to-student-bharathidasan-neelam-cultural-centre-urges




