பா.ஜ.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய தலைவர்கள் மீண்டும் கட்சிப்பணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். பா.ஜ.கவின் தேசிய இளைஞரணி(யுவமோர்ச்சா) தலைவராக இருந்த பெங்களூரை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த பா.ஜ.க எம்.பி.ஹேமந்த் ஜோஷியை புதிய இளைஞரணி தலைவராக கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. நாடு முழுவதும் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அதிக அளவில் கட்சி பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளன. அதுவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களுக்கு அனைத்து கட்சியிலும் பலத்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் பா.ஜ.க தலைமை ஹேமந்த் ஜோஷிக்கு தேசிய இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்து இருக்கிறது. வதோதராவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி முடித்த 35 வயதாகும் ஜோஷி, பாஜகவின் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவர் 2013-ல் பாஜகவில் ஒரு தீவிர தொண்டராக சேர்ந்து பின்னர் குஜராத்தில் கட்சி பணிகளை ஏற்றுக்கொண்டார். 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அவருக்கு வதோதரா தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்தது. இதில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து பா.ஜ.க அடுத்தடுத்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியது. 2025ல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழுவில் குஜராத் எம்.பி.க்களில் அவரும் ஒருவர். பின்னர் அவர் குஜராத்தின் சிறப்பு முதலீட்டுக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். புதிய பதவி கிடைத்தது எப்படி? தகவல் தொழில் நுட்பத்தை அதிக அளவில் ஜோஷி பயன்படுத்தியது அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. வதோதராவில் "டிஜிட்டல் எம்பி அலுவலகம்" அமைத்ததன் மூலம் கட்சிக்குள் அவரது பெயர் பெரியஅளவில் பேசப்பட்டது. குஜராத் யுவ மோர்ச்சாவில் அவர் பணியாற்றிய காலத்தில், பெரிய அளவிலான ஆன்லைன் சந்திப்பு உட்பட டிஜிட்டல் மூலம் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அவரது இந்த முயற்சியால் பெரிதும் கவரப்பட்டனர். ஜோஷியை தேசிய இளைஞரணி தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அவர் பெரிய அளவில் எந்தவித சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதோடு குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பதால் அதனை தேசிய அளவில் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது. வடகிழக்கு, பெண்களுக்கு முக்கியத்துவம் கட்சி நிர்வாகிகள் பட்டியலில் வடகிழக்கில் மாநிலங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்தில் இருந்து தலா ஒருவர் வீதம் மூன்று தலைவர்கள் கட்சியின் தேசிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு அனுபவம் வாய்ந்த தலைவர்களும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வசுந்தரா ராஜே, தீரத் சிங் ராவத் மற்றும் பிப்லப் குமார் தேப் போன்ற முன்னாள் முதல்வர்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 18 எம்.பி.க்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதோடு கட்சியில் பெண்களுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 13 தேசிய துணைத் தலைவர்களில் ஆறு பேர் பெண்கள், இதில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அடங்கும். இது தவிர நான்கு பெண் செயலாளர்களும் ஒரு பெண் பொதுச் செயலாளரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/opportunity-for-the-new-generation-gujarat-mp-hemant-joshi-appointed-as-bjp-youth-wing-chief




