சென்னை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உரம் கரூர் மாவட்டம் செம்பிய நத்தம் ஊராட்சி, நல்லூரான் பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் ரசாயன உர முட்டைகளை வேறு தொழில் பயன்பாட்டிற்கு அனுப்பி கொண்டிருந்ததை, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தலைமையிலான குழு, கிடைத்த ரகசிய தகவல் அறிந்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உர மூட்டைகளை கைப்பற்றி இருக்கிறார்கள் என செய்தி வந்துள்ளது. இங்கு மொத்தம் 837 யூரியா மூட்டைகளில் 537 மூட்டைகள் டாரஸ் லாரியில் ஏற்றப்பட்ட நிலையிலும். மேலும் 300 மூட்டைகள் ஏற்ற வேண்டிய நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அனுப்பி வைத்த டி.ஏ.பி மூட்டைகளில் எஞ்சிய 8 மூட்டைகளும் இருந்துள்ளன. விவசாயிகளின் நாடு தழுவிய நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தான் வேளாண் பயன்பாட்டிற்கான உரங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. மத்திய பட்ஜெட் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கு மத்திய பட்ஜெட்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியாவுக்கு மட்டுமே ரூ1.17 லட்சம் கோடி. றி/ரி மற்றும் பொட்டாஸ், டி.ஏ.பி. உரங்களுக்கு ரூ 54,000 கோடி மானிய ஒதுக்கீடு ஆகும். இறக்குமதி உரம் விலை ஏறுகிற நிலையில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரிய விலையில் கிடைக்கவே இந்த ஏற்பாடு ஆகும். அரசின் மானிய திட்டத்தில் விவசாயிகளுக்காகவே வழங்கப்படுகிற இரசாயன உர மூட்டைகளை மஞ்சள் நிற சாக்குகளில் இருந்து மாற்றி, வேறொரு கம்பெனி பெயரில் வெள்ளை நிற சாக்கில் நிரப்பி இங்கு ஏற்றப்பட்டுள்ளது. எடை மிஷின்கள், டாக்கிங் உள்ளிட்ட தளவாடங்களும் அங்கு இருந்துள்ளன. இந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நீண்ட காலம் இப்படி இங்கு நடப்பதாக தெரிகிறது. உரம் தயாரிக்கிற ஆலைகளுக்கு நேராக மானியத்தை அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விற்பனை கடைகளில் உரம் வாங்குகிற பொழுது அரசின் மானியம் போக தான் இதற்கான எஞ்சிய தொகை பெறப்படுகிறது. விவசாயிகள் உரம் வாங்குகிற பொழுது அவர்கள் விவசாயிகளுக்கான அடையாள அட்டைகளை காட்ட வேண்டும் என்று நிபந்தனை இருக்கிறது. ஆனால் போலி நிறுவனங்களுக்கு அடையாளம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மூட்டைகள் எப்படி போகிறது. மோசடி மானிய உர மூட்டைகளை வேறு பயன்பாட்டிற்கு கடத்துவது, கலப்படம் செய்வது தொடர் நிகழ்வாகிறது. இவர்களுக்கு மொத்த ஏஜென்சியிலிருந்தே நேரடியாக உரங்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் போலியான விற்பனை நிறுவனங்களை தொடங்கி, உர மூட்டைகளை பெற்று மோசடிக்கு பயன்படுத்தப்படுத்துவதாக தெரிகிறது. இப்படியான செயல்களை தடுத்திடவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் உர தர கட்டுப்பாட்டு கண்காணிப்பு குழு பறக்கும் படையாக உள்ளது. விதை மற்றும் உர மோசடிகளை தடுக்கவே இதன் முக்கிய பணி. இது பலன் இல்லாத பறக்க இயலாத படை. சேலத்தில் போலி உரங்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி இருந்த இடத்தில் கண்டுபிடிப்பு, ட்டிரீ பாண்ட் பசை தயாரிக்க கேரளாவிற்கு லாரிகளில் அனுப்பியது, மண்ணைக் கலந்து உரம் என விற்றது. இயற்கை உரம் என போலியை விற்றது. இவர்கள் மீதான நடவடிக்கை என்னவாயிற்று வெளியே வராது. ஆனால் இது எல்லாமே பொதுமக்கள் தலையீட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டினிலிருந்து மக்களை பாதுகாத்திட உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான உரங்களில் கூட்டு மோசடிகள் தொடர்வதை உடன் தடுத்திட அரசின் கறார் நடவடிக்கை வேண்டும். நடவடிக்கை வேறு மாவட்ட வேளாண் துணை இயக்குனர்களை இக்குழுவில் தலைமையேற்று ஆய்வு செய்திட பொறுப்பு அளிக்க வேண்டும். மின் திருட்டை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நியமித்துள்ளது போல் இக்குழுவில் இவர் ஒருவரை இணைக்க வேண்டும். மோசடியில் ஈடுபடும் விற்பனை கடைகளுக்கு தற்காலிக தடை விதிப்பதை நிறுத்தி, நிரந்தரமாக அந்நிறுவனத்தை மூடிடவும், இதன்உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்கச் செய்யவும் வேண்டும். உர கடத்தலுக்கு உதவியவர்கள், ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், துணை போனவர்கள் ஆகியோரை கைது செய்து குற்றவியல் நடவடிக்கை மூலம் கடும் தண்டனை விதித்திட உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவேண்டும். ஆய்வு உணவு கலப்படம் போல உணவை தயாரிக்கும் உரத்திலும் கலப்படம் என்கிற நிலையில் குற்றவியல் நடவடிக்கை வேண்டும். உயர்நிலை அலுவலர்களைக் கொண்ட பல குழுக்களை உடனடியாக அமைத்து மாநில அளவில் உடன் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-gang-smuggling-subsidized-fertilizers-a-flying-squad-that-cannot-fly-tamil-nadu-farmers-association




