வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் ``பட்டைத் தீட்டப்படாத இயற்கையான 7 கற்கள் இருக்கின்றன. இது ஜோதிட பலன்கள் நிறைந்த `அலெக்ஸாண்ட்ரைட்’ என்ற வகையைச் சார்ந்த அதிர்ஷ்டக் கற்கள். மிக அரிய, அதிசயமான நிறம் மாறும் தன்மைக் கொண்டது. இதற்கான சான்றிதழ்களும் சென்னையிலுள்ள ரத்தினக்கல் ஆய்வகம் மூலமாக பெற்றுள்ளேன்’’ என்று கூறி, இடைத்தரகர்கள் சிலரிடம் லாபத்துக்கு விற்றுத் தரக்கோரி அணுகியுள்ளார். பேரணாம்பட்டு அருகேயுள்ள ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கற்களை வாங்கிக் கொள்வதாகக் கூறியதால், ஆனந்தகுமாரும் ஆய்வக சான்றிதழ்களுடன் கற்களை எடுத்துக்கொண்டு நேற்று பேரணாம்பட்டு புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மீட்கப்பட்ட கற்கள் அங்குவந்த புருஷோத்தமனிடம் காண்பித்தபோது, கற்களைப் பின்னர் வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு புருஷோத்தமன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதையடுத்து, ஆனந்தகுமாரும் அங்கிருந்து பேரணாம்பட்டு பஜாருக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு கிளம்பியுள்ளார். அப்போது, புருஷோத்தமன் போன் செய்து `வீட்டுக்குப் போய்ட்டீங்களா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு ஆனந்தகுமார் `இல்லை. இப்போதுதான் கிளம்புறேன்’ என்று கூறியுள்ளார். 10 நிமிடங்கள் கழித்து புருஷோத்தமன் மீண்டும் போன் செய்து `இப்போ எங்க இருக்கீங்க. ஏரிகுத்தி கிராமத்தை தாண்டிவிட்டீர்களா?’ என்று கேட்டுள்ளார். `இல்லை. இப்போ தான் கிராஸ் பண்ணப் போறேன்’ என்று கூறியுள்ளார் ஆனந்தகுமார். பல்லலகுப்பம் அடுத்துள்ள தொட்டி கிணறு பகுதியைக் கடந்த ஆனந்தகுமார் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது, முகமூடி அணிந்து பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், ஆனந்தகுமாரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கற்களின் பையை தூக்கிக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் உடனே மேல்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முகமூடி அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டது புருஷோத்தமனின் கூட்டாளிகளான கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராகுல், சபரி எனத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இன்றைய தினம் புருஷோத்தமனை கைது செய்தனர். அவரிடமிருந்து கற்களையும் மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரின் கூட்டாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே சமயம், ஆனந்தகுமாரிடமும் இந்த கற்கள் விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், பட்டைத் தீட்டப்படாத 7 கற்களின் மதிப்பு வெறும் ரூ.25,000 என்றே கூறியுள்ளார். மேலும், கடந்த 7 வருடங்களாக கை மாற்றி விற்கும் இந்தத் தொழிலில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஆனந்தகுமார். அலெக்ஸாண்ட்ரைட் கற்கள் விலைமதிக்கத்தக்கவையாகும். அவர் விற்பது அசல் கற்கள் தானா அல்லது மலிவான கற்களா? போன்ற கேள்விகளும் எழுவதால், ஆனந்தகுமாரின் பின்னணி பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/color-changing-stones-resembling-gemstones-snatched-from-a-vellore-merchant-one-person-arrested




